புதுச்சேரி
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வு பணியை மேற்கொண்டுள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் சீராய்வு பணி தேவையற்றது. ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டி புதைப்பதாகவும், உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுவதாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அதோடு சிறப்பு வாக்காளர் திருத்த பணியை தேர்தல் ஆணையம் உடனே கைவிட வலியுறுத்தி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் திமுக மாநில அமைப்பாளர் சிவா, காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் முதன்மைச் செயலாளர் தேவ பொழிலன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மதிமுக மாநில செயலாளர் ஹேமா.பாண்டுரங்கன், மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் சந்திரமோகன், கம்யூனிஸ்ட் பாலசுப்ரமணியன், மனிதநேய மக்கள் கட்சி பஷீர் அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி, திராவிடர் கழகம் வீரமணி, முன்னாள் அமைச்சர்கள் ஷாஜஹான், கந்தசாமி, திமுக அவைத்தலைவர் எஸ்பி சிவக்குமார், எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாக தியாகராஜன், முன்னாள் எம்எல்ஏக்கள் மூர்த்தி, அனந்தராமன், நாரா.கலைநாதன். தொகுதி பொறுப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன், டாக்டர் நித்தீஸ் மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.