திமுக அமைப்பாளர் இரா. சிவா செய்தி குறிப்பியில் கூறியதாவது…
புதுச்சேரி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி பாடத்திட்டம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய உரிய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: –
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 15.05.2026 அன்று வெளியிட்டுள்ள புதிய மொழிப்பாடக் கொள்கை (Circular No: Acad-33/2026) கடுமையான கண்டனங்களுக்கு பின்பும் எவ்வித மாற்றமும் செய்யாத ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண்டு பேரதிர்ச்சியாக உள்ளது.
“மாணவர்களின் அழுத்தத்தைக் குறைக்கிறோம்” என்ற போர்வையில், நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் உள்நோக்கத்தோடு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த மக்கள் விரோத, மாணவர் விரோத அறிவிப்பை எதிர்த்து பின்வரும் முக்கியக் காரணங்களின் அடிப்படையில் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.
புதுச்சேரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார அடையாளமாகவும், பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் முதன்மைத் தேர்வாகவும் இருக்கும் பிரெஞ்சு மொழியை, இந்தியாவில் உள்ளூர் மொழியாக (Native Language) அங்கீகரிக்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பிரெஞ்சு மொழியை எவ்விதத் தடையுமின்றி ‘இரண்டாம் மொழியாகத்’ தேர்ந்தெடுத்துப் படிக்கும் முழு உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். பிரெஞ்சு மொழியைப் படிக்க விரும்பும் மாணவர்கள், அதை 3-வது அல்லது 4-வது மொழியாகத்தான் படிக்க வேண்டும் என்ற தற்போதைய புதிய விதிமுறை முற்றிலும் தேவையற்றது. ஒரு சர்வதேச மொழியைக் கூடுதல் சுமையாக மாற்ற நினைக்கும் சிபிஎஸ்இ-யின் இந்த தன்னிச்சையான போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிய மொழிப் பாடத்திட்டத்தைக் கட்டாயமாக்கும் சிபிஎஸ்இ, அதற்கான முறையான பாடப்புத்தகங்களைக் கூட இன்னும் தயாரிக்கவில்லை. 9-ஆம் வகுப்பு மாணவர்களை 6-ஆம் வகுப்புப் புத்தகங்களைப் படிக்கச் சொல்வது வேடிக்கையானது.
பாடப்புத்தகங்கள் ஏதுமின்றி மாணவர்களையும், பெற்றோர்களையும், பள்ளிகளையும், ஆசிரியர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி அலைக்கழிக்கும் சிபிஎஸ்இ-யின் நிர்வாகச் சீர்கேடு கண்டனத்திற்குரியது.
“மாணவர்களுக்கான கற்றல் அறிவு மட்டுமே முக்கியம்” என்று மேடைகளில் பேசிவிட்டு, நடைமுறையில் ‘இரண்டு இந்திய மொழிகள் கட்டாயம்’ என்ற விதியின் மூலம் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளை மாணவர்கள் மீது மறைமுகமாகத் திணிக்கும் வேலையை ஒன்றிய அரசும் சிபிஎஸ்இ-யும் உடனடியாகக் கைவிட வேண்டும். பிரெஞ்சு மொழியோடு பிரிக்க முடியாத வரலாற்றுத் தொடர்புடைய புதுச்சேரி மண்ணில், அம்மாநில மாணவர்களின் மொழி உரிமை பறிக்கப்படும் போது, புதுச்சேரி அரசு மெத்தனப் போக்குடன் அமைதி காப்பது வேதனையளிக்கிறது.
புதுச்சேரி முதல்வர் அவர்கள் ‘போர்க்கால அடிப்படையில்’ இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, புதுச்சேரி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி பாடத்திட்டம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில், எந்தவொரு ஒன்றிய அமைப்போ அல்லது ஒன்றிய அரசோ புதுச்சேரி மண்ணில் இருந்து பிரெஞ்சு மொழியை நீக்க முனையாதவாறு, அதற்கான நிரந்தர சட்டப்பூர்வப் பாதுகாப்பையும், சிறப்பு விலக்கையும் புதுச்சேரி அரசு மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும்.
ஒன்றிய அரசின் உத்தரவுக்கு அடிபணிந்து வழக்கம்போல் முதல்வர் அவர்கள் தலையாட்டி பொம்மையாக அமைதியாக இருந்தால், மாணவர்களின் கல்வி உரிமையையும், புதுச்சேரியின் மொழி அடையாளத்தையும் சிதைக்கப் பார்க்கும் ஒன்றிய அரசு, சிபிஎஸ்இ மற்றும் இதற்குத் துணைபோகும் புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை எதிர்த்து, அனைத்துத் தரப்பு மக்களையும் திரட்டித் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன் என்று தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளார்