ஏ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர்.
குன்னம் தொகுதி தேர்தல் கள நிலவரம்.
பெரம்பலூர்.
தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் வருகின்ற 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் சிவசங்கரும், அ தி மு க கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் சரண்யா என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் கீர்த்திவாசனும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரேவதி என்பவரும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் இருக்கிறார்கள். இதில் திமுக சார்பில் வேட்பாளராக மீண்டும் களம் இறக்கப்பட்டு இருக்கும் எஸ். எஸ். சிவசங்கருக்கு இம்முறை வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை கள ஆய்வு செய்ததில் கிடைத்த தகவல்களை சுருக்கமாக பார்ப்போம்.
போக்குவரத்து துறை அமைச்சர், மின்துறை அமைச்சர் என முக்கிய பொறுப்புகளில் இருந்து வரும் சிவசங்கர் அரியலூர் மாவட்டத்தில் திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். தொகுதியில் பொதுமக்கள் மத்தியில் ஓரளவு நல்ல பெயர் இருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது. ஆனால் ஐந்து வருடம் அமைச்சராக இருந்த ஒருவர் தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஓட்டுக்கு பணம் கொடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது ஏன் என்கின்ற கேள்வி எழுகின்றது. குன்னம் தொகுதி முழுக்க உள்ள மகளிருக்கு இலவசமாக சில்வர் அண்டா கொடுத்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நான்கு வருடம் தொகுதியில் பெரிதாக செய்யாத அமைச்சர் சிவசங்கர் கடைசி ஒரு வருடத்தில் மட்டும் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தினார். இது ஓட்டுக்காக தான் என்பது படிப்பறிவு இல்லாத பாமரனுக்கு கூட தெரிகின்றது. தற்போது கூட தொகுதி முழுக்க இரவோடு இரவாக எட்டாயிரம் ரூபாய்க்கான கூப்பனை விநியோகித்து வருகிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
தேர்தல் ஆணையமே கூப்பன் கொடுக்கக் கூடாது என்று சொல்லியும் தோல்வி பயத்தால் இந்த வேலையை அமைச்சர் ஆதரவாளர்கள் செய்து வருகிறார்கள்.
சிவசங்கரை எதிர்த்து அதிமுக சார்பில் பலமான வேட்பாளர் விஜிஎம் (VGM) நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இந்த தொகுதி இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட போது சிவசங்கரன் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை தற்போது அமைச்சர் சிவசங்கரனே வெற்றி பெறுவாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
சிவசங்கரின் ஆதரவாளர்கள் கடந்த ஐந்து வருடத்தில் தொகுதியில் செய்த வளர்ச்சி திட்டங்களில் பெருமளவு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை காண முடிகிறது. தொகுதியில் உள்ள மற்ற ஊர்களுக்கு வளர்ச்சிப் பணிகளை செய்கிறாரோ, இல்லையோ லப்பை குடிக்காடு பேரூராட்சிக்கு மட்டும் பல்வேறு பணிகளை செய்து இருக்கிறார். இது மற்றவர்கள் மத்தியில் எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லப்பைக் குடிக்காட்டில் இம்முறை தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஓட்டுகளை பிரிப்பார்கள்.
மேலும் திமுகவில் பெரிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தான் இருக்கிறது. இந்த கட்சியினர் ஓட்டுகள் அதிகம் கிடைத்தால் தான் சிவசங்கரன் வெற்றி என்பதை பார்க்க முடியும். காரணம் அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது. எப்படியும் இம்முறை சிவசங்கரை தோற்கடிக்க வேண்டும் என்று பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள். அதுவும் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்த சரண்யா வெற்றி பெற வேண்டும். ஒரு ஓட்டு கூட சிவசங்கருக்கு கிடைக்கக் கூடாது என்று ஊர் கூட்டம் போட்டு பேசியதாகவும் தகவல்கள் வருகின்றது.
மேலும் திமுகவில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் தருகிறார்களோ அந்த அளவுக்கு பணத்தை அதிமுக வினரும் தருவதற்கு தயாராகவே இருக்கிறார்கள். இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், அவருடைய மகன் ரவி பச்சமுத்துவும் குன்னம் தொகுதியில் இம்முறை நம்முடைய வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொகுதியிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை அரசியலில் இதுவரை நமக்கு எதிரியாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட நம் சமூகத்தைச் சேர்ந்த சிவசங்கர் தான் முதல் எதிரி என்கின்ற நிலையில் தேர்தல் வேலை பார்த்து வருகிறார்கள்.
மேலும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசங்கரன் எதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தலில் நிற்க வேண்டும் என்கின்ற நியாயமான கேள்வியை உடன்பிறப்புகள் முன் வைக்கிறார்கள்.
கடந்த முறை குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் சிவசங்கர் வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை கள நிலவரம் அப்படி அல்ல, என்பது தொகுதியை கள ஆய்வு செய்த போது தான் தெரிகின்றது. குன்னம் தொகுதியை பொறுத்தவரை தலித், வன்னியர், உடையார் இந்த மூன்று சமூகம்தான் பெரிய அளவில் வசிக்கிறார்கள். வெற்றி தோல்வியை இவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். அப்படி பார்த்தால் உடையார் வாக்குகளும், வன்னியர் வாக்குகளும் சிவசங்கருக்கு கிடைக்கவில்லை என்றால் வெற்றி என்பது சிவசங்கருக்கு அவ்வளவு எளிது இல்லை என்பது தான் உண்மை.