புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நிரவியில் ஆர்வலர் அஸ்ரப் அலி காரைக்கால் பாரம்பரிய மையம் தொடக்கம்-இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டு
வருடம் தோறும் ஏப்ரல் 18 ஆம் தேதி சர்வதேச பாரம்பரிய தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 1982 ஆம் ஆண்டு இந்நாளில் சர்வதேச நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்கள் கவுன்சில் நிறுவப்பட்டது.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம் 1983 ஆம் ஆண்டு வழங்கிய ஒப்புதலின் அடிப்படையில், இந்நாள் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியங்களை பாதுகாக்கும் பொதுப்பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்த இந்நாள் உதவுகிறது. நினைவுச்சின்னங்கள், பாரம்பரியங்கள் மற்றும் இயற்கை வளங்களை எதிர்கால தலைமுறைகளுக்காக பாதுகாப்பதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான நோக்கத்திற்கு இந்நாள் முக்கியத்துவம் அளிக்கிறது.
மறுபுறம், பண்டைய கால பாரம்பரிய, கலாச்சார, கலை மற்றும் பண்பாட்டு சின்னங்களாக விளங்கும் அரும்பொருட்கள் திருடப்படுவது, ஊழல், கொள்ளையடிக்கப்படுவது, கடத்தப்படுவதால் வரலாற்றுச் சுவடுகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.
இருப்பினும், பல செயற்பாட்டாளர்கள் தங்களது சொந்த ஆர்வத்தின் காரணமாக பாரம்பரியப் பொருட்களை பாதுகாத்து வருகின்றனர் அந்த வகையில், நிரவி கிராமத்தில் மேல ராஜா வீதியில் வசிக்கும் திரு. அஸ்ரப் அலி, தனது இல்லத்தையே அருங்காட்சியகமாக மாற்றி, “காரைக்கால் பாரம்பரிய மையம்” என்ற பெயரில் உலக பாரம்பரிய தினத்தன்று தொடங்கினார்.
அவர் அனைவரையும் வரவேற்று பேசுகையில், தனது தந்தை காலத்திலிருந்தே ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, பழைய வீடுகள், பழம்பொருள் அங்காடிகள், குப்பைத் திடல்கள் போன்ற இடங்களில் இருந்து அரிய பண்டைய காலப் பொருட்கள் மற்றும் பழமையான சிறப்பு பொருட்களை சேகரித்து, கடந்த 50 ஆண்டுகளாக பாதுகாத்து வருவதாக தெரிவித்தார்.
அவரை ஊக்குவிக்கும் விதமாகவும், அவரைப் போல பலரும் பாரம்பரியத்தை காக்கத் தூண்டவும், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் அவரை பாராட்டி சிறப்பித்தனர். இயக்கத்தின் தலைவர் முனைவர் ஆனந்தகுமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசுகையில், புதுச்சேரி அரசு திரு. அஸ்ரப் அலி அவர்களை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்க வேண்டும் என்றும், அந்த மையத்தை பயன்படுத்தி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறையின் தகவல் அதிகாரி திரு. திருமேனி செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தார். மேலும், அதே துறையின் தகவல் உதவியாளர் திரு. கென்னடி தாஸ் பங்கேற்றார்.
தொடங்கப்பட்ட பாரம்பரிய மையத்தில் சுதந்திரத்திற்கு முற்பட்ட இந்தியா, சுதந்திர இந்தியா, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி காலம், அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பழங்கால தபால் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், பறவைகள், விலங்குகள், சுற்றுலா தளங்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் தலைகள் இடம்பெற்றிருந்தன.
அதேபோல், நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகளின் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், சோழர் காலத்து காசுகள், கிழக்கிந்திய கம்பெனி ஆணாக்கள், ஆற்காடு நவாப் நாணயங்கள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும், பழங்கால பலவகை விளக்குகள், விவசாய கருவிகள், மரத்தால் செய்யப்பட்ட பெட்டகங்கள், இரும்புப் பெட்டிகள், நகைப் பெட்டிகள், கண்ணாடிப் பொருட்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
மக்கா நகரில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம் பள்ளிவாசலுக்குள் அமைந்துள்ள ஜம்ஜம் கிணற்றிலிருந்து சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட புனித நீரும் காட்சிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காரைக்குடி சமையல் பாத்திரங்கள், மரத்தாலான பல்லாங்குழி, செம்பினால் செய்யப்பட்ட சோப்பு சாமான் எனப்படும் பழங்கால விளையாட்டு சாதனங்கள், பலவகை கடிகாரங்கள், பேனாக்கள், சிகரெட் லைட்டர்கள், பலவகை போர் ஆயுதங்கள், மண் பாண்டங்கள், போர்சலின் கிண்ணங்கள், பழங்கால ரேடியோ, கேமரா மற்றும் வீடியோ கருவிகள் போன்ற எண்ணற்ற அரிய புராதனப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் மோகனசுந்தரம், வினோத், ஸ்ரீதர், சுந்தர் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டு அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.இறுதியில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் திரு. ராஜா பாலு நன்றி தெரிவித்தார்.