கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி இயற்கை எழில் நிறைந்த அடர் வனங்களும் தேயிலை தோட்டங்களும் நிறைந்த பகுதி மேலும் தொடர்ந்து நகராட்சி பகுதியில் மழைக்காலங்களில் எண்ணிலடங்கா பேரருவிகள் சிற்றோடைகள் தொடர் மழை காலங்களில் அனைத்து நீர்த்தேக்க பகுதியில் இருந்தும் வெளியேறும் நீர் பல்வேறு ஆறுகளின் வழியாக வெளியேறி அவை அனைத்தும் உள்ளூர் மக்களுக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கும் காண்போர்க்கு மன மகிழ்ச்சியை தருவதோடு எங்கு பார்த்தாலும் தேயிலைத் தோட்டங்கள் அடர்வன மரங்கள் ஆகியவைகள் பசுமை போர்வை கொண்டு போர்த்தியது போல் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் ஆகியோருக்கு பூலோக சொர்க்கமாக காட்சியளிக்கும்
வால்பாறை நகராட்சி பகுதியில் பொதுமக்கள் வியாபாரிகள் வணிகர்கள் அனைவரும் இயற்கையை சிதைக்காத வகையில் அனைத்து இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக நீரோடைகள் ஆறுகள் ஆகியவற்றின் கரையோரங்களில் உள்ள குடியிருப்பு வாசிகள் வீட்டு கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்ச் தலையணைகள் போன்ற கழிவுகளை போடுவதை தவிர்த்து, நதிவழி பாதையை மாசுபடாமல் பாதுகாப்பது நமது கடமை ஆகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பரந்துபட்ட இயற்கை அழகு சிந்தும் வால்பாறை நகராட்சி பகுதியை சுற்றிப் பார்ப்பதற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் மேலும் மேலும் ரசித்து மனமகிழ்ச்சி அடையும் வகைகள் வால்பாறை நகராட்சி பகுதியை தூய்மையாகவும் அழகாகவும் பராமரிப்பது நமது கடமை ஆகும்.
ஆற்றோரம் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் உருவாகும் கழிவுகளை கட்டாயம் வால்பாறை நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும்.
வணிகர்கள் வியாபாரிகள் சாலையோர வியாபாரிகள் ஆகியோர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தவிர்த்திட வேண்டும். அதற்கு மாற்றாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் நகராட்சியின் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக பயன்படுத்த வேண்டிய மாற்றுப் பொருள்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட பொருள்களை பயன்படுத்த வேண்டும்.
உணவு விடுதிகள், தங்கு விடுதிகள், ரிசார்ட் ஆகிய ஆகிய இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது. அதற்கு மாற்றாக எவர்சில்வர் குவளைகள்
தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
2026 திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, நான்கு வகையான கழிவுகளை தரம் பிரித்து நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும்.
உணவகங்கள் தங்கு விடுதிகள் ரிசார்ட்கள் ஆகிய இடங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவது தவிர்க்கவும் மாற்றுப் பொருளை பயன்படுத்த சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்துவதை தவிர்த்து தங்கள் வளாகத்துக்குள் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நகராட்சி பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் ஏற்படுத்தும் போது அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கட்டிட இடிபாடு கழிவுகள் சாலை ஓரங்களில் கொட்டக்கூடாது. தங்கள் கட்டுமானங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே அந்தப் பொருட்களை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. இனி திறந்தவெளி பகுதியில் கட்டிடக்கழிவுகள், கடையில் உருவாகும் கழிவுகள், வெல்டிங் பட்டையில் உருவாகும் கழிவுகள் ஆகியவற்றை திறந்தவெளியில் கொட்டினால் கட்டாயம் கட்டிடக்கழிவுகள் கொட்டுபவர்களுக்கு 50 ஆயிரம் அபராத விதிக்கப்படும். மேலும் இது தொடர்பாக பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு கழிவுகளை வெளியே கொட்டுபவர்கள் திடக்கழிவு மேலாண்மை சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.
எங்கும் பசுமை எதிலும் பசுமை இவை இரண்டும் இரண்டறக் கலந்து மாசற்ற வால்பாறை நகராட்சி பராமரிப்பதற்கு நகராட்சி நிர்வாகத்துடன் மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக வால்பாறை நகராட்சி ஆணையாளர் குமரன் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்