தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் அருகே அடிப்படை வசதிகள் இல்லை: 2026 தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட சடையாபாளையம் பஞ்சாயத்தின் எல்லைக்குட்பட்ட நெறையூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால், பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குடிநீர் வசதி, தண்ணீர் சேமிப்பு தொட்டி (டேங்க்), சாலை வசதி, போக்குவரத்து வசதி, இடுகாடு வசதி மற்றும் நியாய விலைக்கடை போன்ற அடிப்படை தேவைகள் எதுவும் இல்லையென கிராம மக்கள் தெரிவித்தனர்.
குடிநீர் வசதி இல்லாத காரணத்தால், கிராம மக்கள் 20 லிட்டர் கேன்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இது அவர்களுக்கு கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்த பிரச்சினைகள் குறித்து பலமுறை அரசு அதிகாரிகளுக்கும், அரசியல் பிரதிநிதிகளுக்கும் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் கூட வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து, “அடிப்படை வசதிகள் இல்லையெனில் தேர்தல் வேண்டாம்” எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டால்தான் எங்களால் இயல்பான வாழ்க்கை நடத்த முடியும். தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நெறையூர் கிராமத்தை காப்பாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.