காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையானதும் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றதுமான பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.

இது கல்யாண பிரார்த்தனை தலம் என்பதால் இங்கு திருக்கோயில் சார்பிலும் உபயதாரர்கள் சார்பிலும் கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் திருமணமாகாத பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டு கல்யாண பாக்கியம் பெறுகின்றனர். அதனால் பக்தர்கள் வருகை நாளுக்குநாள் இத்திருக்கோயிலில் அதிகரித்து வருகிறது.

புராண காலத்தில் தேவர்களின் தலைவனாகிய இந்திரன் வல்லக்கோட்டைக்கு வந்து முருகப் பெருமானை வேண்டி, இந்திராணியைத் திருமணம் செய்து கொண்டான். வல்லக்கோட்டைக்கு வந்து கல்யாண உற்சவத்தில் பங்குபெறுபவர்களுக்கு தடையின்றி திருமணம் நடைபெறும் என்பது இத்திருக்கோயில் முருகப்பெருமானின் சிறப்பாகும்.

அந்த வகையில் திருமண பிராத்தனை நிறைவேறிய சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவ உபயதாரர் சார்பாக செவ்வாயன்று காலை கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு உற்சவர் ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்குப் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உட்பட பலவித பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சாமந்தி, கதிர்பச்சை, ரோஜா மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மணமக்கள் திருக்கோலத்தில் மயில் மண்டபத்திற்கு முருகப்பெருமான் எழுந்தருளினார். கல்யாண வரம்வேண்டி திராளான பக்தர்கள் மாலைகளுடன் வந்திருந்தனர்.

காலை 9.30 மணிக்கு கல்யாண உற்சவம் தொடங்கி 11.30 மணி வரை நடைபெற்றது. திருக்கோயில் தலைமை அர்ச்சகர் தலைமையில் ஐந்து அர்ச்சகர்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் ஓதினர். மங்கலவாத்தியங்கள் ஒலித்திட 11.30 மணிக்கு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. தலைமை அர்ச்சகர் மந்திரங்கள் ஓதி மாங்கல்யத்தை முருகப்பெருமான் திருக்கரத்தில் வைத்து வள்ளி தெய்வானைக்கு அணிவித்தார்.

அப்போது வள்ளி மணாளனுக்கு அரோகரா தெய்வானை நாயகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு பக்தர்கள் வணங்கினர். முருகப்பெருமானுக்கு 16 விதமான தீபாராதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது பக்தர்கள் கொண்டு வந்த மாலையை முருகப்பெருமான் திருவடியில் சமர்பித்து பிறகு தங்களது கழுத்தில் அணிந்து கொண்டனர்.

அதன்பிறகு கல்யாண கோலத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்கிட முருகப்பெருமான் மூன்று முறை திருக்கோயிலை வலம் வந்தார். உற்சவத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் திருமண அட்சதை, சர்க்கரை பொங்கல், புளியோதரை பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சாமந்தி, கதிர்பச்சை, வெற்றிலை மாலைகள் அணிந்து மூலவர் காட்சியளித்தார்.

செவ்வாய்கிழமை என்பதால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வல்லக்கோட்டைக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கல்யாண உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் திரு.சி.குமரதுரை அவர்கள் அறிவுரையின்படி திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா.செந்தில்தேவராஜ், அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி, மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

செவ்வாயன்று காலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவடிகள் சுமந்து வந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *