பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அமைச்சர் குடும்பத்துடன் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான கருத்துகளை பகிர்ந்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “இந்த தேர்தலில் கூட்டணியின் பலம் தெளிவாக பிரதிபலிக்கிறது. மக்கள் ஆதரவு மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமைவது உறுதி” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில் தேர்தல் நடவடிக்கைகள் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தலைமை தேர்தல் ஆணையர் கணேஷ் குமார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பல கேள்விகளை எழுப்புகின்றன எனவும் கூறினார். “தமிழ்நாட்டில் தேவையற்ற முறையில் முக்கிய அதிகாரிகளை கடைசி நேரத்தில் மாற்றுவது, அதிகாரிகளில் பயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவது போல தெரிகிறது” என விமர்சித்தார்.
தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் அமைப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், “தேர்தல் ஆணையம் ஒரு சுயாதீன அமைப்பாக இருந்து, நியாயமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைய அமைப்பு ஆளுங்கட்சியின் ஆதிக்கத்தில் உருவாக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றன. அந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் தலைமை தேர்தல் அதிகாரியின் நடவடிக்கைகள் உள்ளன” என தெரிவித்தார்.
மேலும், சில இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை குறிப்பிட்ட அவர், “அதிமுக வேட்பாளர்கள் தொடர்பான பகுதிகளில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், பல்வேறு கட்சிகளிடமிருந்தும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ‘டோக்கன்’ என்ற பெயரில் நோட்டீஸ் வழங்கி வாக்குகளைப் பெற முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் இத்தகைய ஏமாற்று முயற்சிகள் தமிழ்நாடு மக்களிடம் எப்போதும் பலிக்காது” என்று தெரிவித்தார்.
“மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் தவறான முயற்சிகளை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர். எனவே இத்தகைய செயல்கள் எந்த விதத்திலும் தேர்தல் முடிவுகளை பாதிக்காது” எனவும் அமைச்சர் சிவசங்கர் உறுதியுடன் தெரிவித்தார்.