கோவை:
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் என்ற போர்வையில், நாடாளுமன்றக் கட்டிடத்தின் செங்கல்களைப் பெயர்த்து எடுப்போம், காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்துவோம் என்றெல்லாம் தேச விரோதக் கருத்துக்களும், வங்கதேசத்தைப் போல பாரதத்திலும் உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டும் எண்ணங்களும் விதைக்கப்பட்டு வருகின்றன.
நீட் தேர்வுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் தற்போது மாபெரும் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதில் உண்மையான மாணவர்கள் பங்கேற்காமல் பிரிவினைவாதிகளும் தேச விரோதிகளுமே பங்கேற்று பாரதப் பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சரையும் தேடிச் சென்று தாக்குவோம் என வன்முறைப் பேச்சுகளைக் கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர்.
இந்த ஆபத்தான வன்முறைச் சூழல் மெல்ல மெல்லத் தமிழகத்திலும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், நேற்றைய தினம் திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் SFI மாணவர் அமைப்பும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக SFI மற்றும் DYFI அமைப்புகளும் இதற்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தியுள்ளன. மாணவர்களுக்கு எதிரான சக்திகளை உருவாக்கி, வன்முறையைத் தூண்டி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் வகையில் செயல்படும் இத்தகைய அமைப்புகளின் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், தேசத்திற்கு எதிரான கருத்துக்களைப் பரப்பும் ஆர்ப்பாட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்து இளைஞர் முன்னணி சார்பாக கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்து இளைஞர் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செய்தியாளர் தனபால், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சூர்யா, நகர ஒருங்கிணைப்பாளர் மதன், கோகுல், சரண், சந்துரு, அருண் மற்றும் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரில் சென்று இக்கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தனர்.