கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே. எட்டிப்பட்டி ஊராட்சி கரடி கவுண்டனூர் கிராமத்தில், இரு தரப்பினருக்கு இடையே 26.04.2026 அன்று ஏற்பட்ட தகராறில், ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் பைப் லைன் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, சுமார் 200 குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்கும் குடிநீர் குழாய் உடனடியாக பழுது பார்க்கப்பட்டு, குடிநீர் விநியோகம் சீரமைக்கப்பட்டது.
மேலும், இளவரசன் என்பவர் தனது வீட்டிற்கு முறையற்ற குடிநீர் இணைப்பு எடுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்தது என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கே. எட்டிப்பட்டி ஊராட்சி செயலாளர் பி. சரவணன், ஊத்தங்கரை வட்டம் சாமல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இளவரசன், ஜெயவேல், அரசு, ஜெய்சங்கர் ஆகிய 4 பேருக்கு எதிராக குற்ற எண் 48/2026 கீழ், TNPPDL சட்டம் பிரிவு 3(1)ன் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகவலை மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.