நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு பேரூராட்சி திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச ஆரோக்கிய நலவாழ்வு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாம் மாவட்டச் செயலாளர் மா. சுகுமார் தலைமையில், பாப்பாகோவிலில் செயல்பட்டு வரும் சர் ஐசக் நியூட்டன் கல்விக்குழுமம் இணைந்து நடத்தியது. தலைஞாயிறு ஒன்றியம் மற்றும் பேரூர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முகாமிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காலை தொடங்கிய இந்த முகாமில் சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை, ஆலோசனை மற்றும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. உடல்நல பராமரிப்பு, வாழ்க்கைமுறை மாற்றங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்தும் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
தலைஞாயிறு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் முகாமில் பங்கேற்று மருத்துவ சேவைகளைப் பெற்றுப் பயனடைந்தனர். மருத்துவர்களின் ஆலோசனைகளை ஆர்வத்துடன் கேட்டறிந்த பொதுமக்கள், இத்தகைய இலவச மருத்துவ முகாம்கள் கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தனர்.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மூலிகை டீ, தானிய உணவு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், மருத்துவ சேவைகளை ஒரே இடத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், சர் ஐசக் நியூட்டன் கல்விக்குழுமத்தின் பிரதிநிதிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கினர்.
நாகை மாவட்ட செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி