இடைக்கழிநாடு அருகே சிறுபாணாற்றுப்படை நூல் எழுதிய சங்கப்புலவர்
நல்லூர் நத்தத்தனார் நினைவு போற்றுதல் மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
கல்பாக்கம்
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்க் கவிஞர் நாளாக தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 29 ) இடைக்கழிநாடு, சங்க புலவர் நல்லூர் நத்தத் தனார் நினைவுத் தூணிற்கு செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
புலவர்கள் அரசன் முன்னின்று பாடி பரிசில் பெறுவர். இவர்கள் கூத்தர், பாணர், பெறுநர், விரலியர் எனப்படுவர். புலவர்கள் சிறிய யாழ் கொண்டு பாட்டிசைத்து அரசர்களிடம் பரிசில் பெற்று வரும் போது எதிரே வரும் பாணனிடம்(பண் இசைத்து வருபவர்) தாம் பரிசாக பெற்று வந்த செல்வத்தையும் பொருளையும் அறிவுறுத்தி அவரும் அரசனிடம் சென்று தாம் பெற்றவற்றை பெறும்படி ஆற்றுப்படுத்தி அனுப்புவது சிறுபாணாற்றுப்படை ஆகும்.சிறுபாணாற்றுப்படை செய்யுளை வழங்கிய இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
ஒய்மா நாட்டை (தற்போதைய திண்டிவனம்)ஆண்டு கொண்டிருந்த நல்லியக் கோடனை பாராட்டி பாணாற்றுப்படை ஒன்றினை பாடியுள்ளார். நல்லியக்கோடன் ஓவியக் குடியில் பிறந்தவன். இவன் ஆண்ட ஒய்மா நாடு ஐவகை நிலங்களும் அமையப்பெற்ற நாடாகும். மாவிளங்கை, தற்போதைய திண்டிவனத்தினை தலைநகராகக் கொண்டு நல்லியக்கோடன் ஆட்சிப்புரிந்து வந்தான். (மாவிளங்கை, எயிற்பட்டினம், ஆமூர், வேலுர், கிடங்கை). இவரது பாடல்கள் நாட்டு வளம், நகரச் சிறப்பு, உள்ளத்துரன், ஈகையின் ஏற்றம், தமிழர் பண்பாடு முதலியவற்றை எடுத்துரைப்பதாக அமையப்பெற்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சங்க புலவர் நல்லூர் நத்தத்தனார்
நினைவுகளைச் சிறப்பிக்கும் வகையில் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் மு. சாந்தி, இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலர் தி. அருள்குமார், சிறப்புச் சொற்பொழிவாளர்கள் முனைவர் சு. மாதவன், ஆ.தி. பகலன்,அகநம்பி, தமிழ் கவிஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.