கோவையில் சாமியார் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி அவரது பேத்திகள் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை நவக்கரையை சேர்ந்தவர் ராமானந்தமூர்த்தி. சாமியாரான இவர் அதே பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் ‘ஸ்ரீ மலையாள தேவி துர்கா பகவதி பிராட்டியம்மன்’ என்ற கோவிலைக் கட்டி பராமரித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2024ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார். அவரது உடல் கோவில் வளாகத்திலேயே புதைக்கப்பட்டுள்ளது.
ஆனால், சாமியார் உயிரிழந்த தகவலை அவரது முதல் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல், இரண்டாவது மனைவியின் மகன் ஆனந்தகுமார் தன்னிச்சையாக புதைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் தங்களது தாத்தா ராமானந்தமூர்த்தியை அடித்துக் கொன்று, ஜீவ சமாதி அடைந்ததாக ஆனந்தகுமார் நாடகமாடுவதாக சாமியாரின் முதல் மனைவி வழி பேத்திகளான கிருத்திகா மற்றும் உஷா குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், ராமானந்தமூர்த்தியின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கோவை தெற்கு கோட்டாட்சியரிடம் அவர்கள் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து ராமானந்தமூர்த்தியின் பேத்திகள் கூறுகையில், “எங்கள் தாத்தாவின் மரணம் குறித்து ஆனந்தகுமாரிடம் கேட்டபோது, அவர் ஜீவ சமாதி அடைந்துவிட்டதாக கூறுகிறார். ஆனால், அவரை சொத்துக்காக அடித்து கொன்றதாக எங்களுக்கு தெரியவருகிறது. மேலும், அவரது உடலை எடுத்து பூஜை செய்ய இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு செய்தால் ஆதாரங்கள் அழிக்கப்படும். எனவே இதை தடுத்து நிறுத்துவதோடு, எங்கள் தாத்தாவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்” என்றனர்.