நாகப்பட்டினம்,மே.7-
உளுந்து சாகுபடிக்கு சித்திரை பட்டம் உகந்தது காலம் குறித்து,திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
(சித்திரை பட்டம்)
உளுந்து பயிரிட ஏற்ற தருணம் சித்திரை பட்டமாகும். இந்த பட்டத்தில் உளுந்து பயிரிட்டால் விவசாயிகள் நல்ல மகசூல் பெறலாம். உளுந்து சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை போதுமானதாகும். உளுந்து சாகுபடியில் அதிக விளைச்சல் பெற தகுந்த உயர் விளைச்சல் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். கோடை பருவத்திற்கு ஆடுதுறை 5, வம்பன் 8,11 போன்ற ரகங்கள் உகந்தவையாகும். விதைத்த 15 நாட்களில் செடிகளை கலைத்து சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற அளவில் பராமரிப்பதன் மூலம் செடிகள் நன்கு கிளைத்து அதிக காய்கள் பிடிக்க ஏதுவாகும். பூக்கள் தோன்றிய உடன் வேர்கள் மூலம் சத்துகள் எடுக்கும் தீவிரம் குறைந்து விடும்.
(டி.ஏ.பி. உரம்)
போதுமான சத்து பெற இலைவழி மூலம் டி.ஏ.பி. 2 சதவீதம் தெளிக்க வேண்டும். அதாவது ஏக்கருக்கு நான்கு கிலோ டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாள் இரவே ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் கரைசலை துணியால் நன்கு வடிகட்டி காலை அல்லது மாலை வேளைகளில் உளுந்து விதைத்த 25-வது மற்றும் 40-வது நாளில் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் உதிர்வதை தடுப்பதுடன் பயிர்கள் திரட்சியாக மணி பிடித்து கூடுதல் மகசூல் பெறலாம். மஞ்சள் தேமல் நோய் ஒரு வைரஸ் நோயாகும். இதனை கட்டுப்படுத்த உழவியல் முறையாக பாதிக்கப்பட்ட செடிகளை உடனடியாக பறித்து களைதல் வேண்டும்.
(அதிக மகசூல் )
வேர் அழுகலை கட்டுப்படுத்த டிரைகோடர்விரிடியை ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் மக்கிய தொழுஉரம் அல்லது மணலில் கலந்து விதைத்த 30 நாட்கள் கழித்து மண்ணில் இடவேண்டும். அல்லது வேப்பம் புண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு 50 கிலோ இட வேண்டும். இது போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் அதிகமாக மகசூல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *