24 மணி நேரத்தில் சாதனை: யானை மீது கம்பீரமாக அமர்ந்து தமிழக மக்களுக்கு நன்றி சொல்லும் முதல்வர் விஜய் –
கோவை கலைஞரின் வியக்கத்தக்க படைப்பு!
தமிழக சட்டசபை தேர்தலில் யானை பலத்துடன் மாபெரும் வெற்றி கண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, கோவை குனியமுத்தூர் யூஎம்டி ராஜா அவர்கள் களிமண்ணில் ஒரு கம்பீரமான சிலையினை வடிவமைத்துள்ளார். இந்தச் சிலையில் முதல்வர் விஜய் அவர்கள் ஒரு மாபெரும் யானையின் மீது அமர்ந்து, தனது தோளில் கட்சி கொடியையும் துண்டையும் அணிந்தபடி, தமிழக மக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் கையில் நன்றிப் பதாகையை ஏந்தியவாறு மிகக் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.
சிலையின் கீழ் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சின்னமான விசிலையும், “மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்” என்ற வாசகத்தோடு ஆங்கிலத்தில் ‘CM’ என்ற வார்த்தையையும் வடிவமைத்து, இதனை ஒரு நினைவுச் சின்னமாக உருவாக்கியுள்ளார். ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் விஜய் அவர்கள் யானையில் வலம் வந்து நன்றி சொல்வது போலச் சித்தரிக்கப்பட்டுள்ள இந்தச் சிலையினை, முதல்வரின் மீதான ஈர்ப்பால் மிக அவசரமாக வெறும் 24 மணி நேரத்திற்குள் கலைஞர் ராஜா செய்து முடித்துள்ளார். இந்த அன்பளிப்பினை விரைவில் முதல்வருக்கு நேரில் வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.