வடலூரில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் வட மாநிலத்தவர்கள் போலி நகை கொடுத்து ரூ. 10 லட்சம் மோசடி
வெளியான சிசிடிவி காட்சிகள்
குறிஞ்சிப்பாடி ஒன்றியம்,வடலூர் ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த செல்வக்குமரன் என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி (50) இவர் காவல்நிலையம் எதிர்புறம் உள்ள கங்கை மருத்துவமனை தெருவில் ஜவுளிக்கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல்மாதம் 28ஆம் தேதி தமிழ்ச்செல்வி ஜவுளி கடையில் இருந்தபோது துணி வாங்குவது போல் அங்குவந்த வடமாநில இளைஞர் ஒருவர் கைக்குட்டை (கர்ச்சீப்) ஒன்றை வாங்கிகொண்டு பின்னர் தமிழ்செல்வியிடம் பேச்சு கொடுத்து எனக்கு இரண்டு அக்கா உள்ளனர் அவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை திருமணம் செய்வதற்கு என்னிடம் நகை உள்ளது.
ஆனால் நான் வெளி மாநிலம் என்பதால் என்னிடம் யாரும் நகை அடகு வைக்கவும் விற்கவோ வாங்கவோ முன்வரவில்லை நீங்கள் பெரிய மனது வைத்து அந்த நகைகளை குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டால் என்இரண்டு அக்கா திருமணம் நடக்கும் என்று கூறிவிட்டு அவரிடம் செல்போன் எண்ணைவாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
இதையடுத்து தமிழ் செல்வியும் இதனை பொருட்படுத்தாமல் சேலத்தில் உள்ள அவருடைய அக்கா வீட்டிற்கு சென்று உள்ளார். பின்னர் அதே இளைஞர் இரண்டு நாட்கள் கழித்து வட மாநில ஒரு இளைஞர் மற்றும் ஒரு பெண்மணியை அழைத்து கொண்டு ஜவுளிகடைக்கு வந்தபோது கடையில் வேலை செய்த பெண்ணிடம் நாங்கள் துணி அதிக அளவில் வாங்க வந்துள்ளோம் என்று கூறி நான் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தேன் அப்போது உரிமையாளரிடம் பேசினேன் என்னை நியாபகம் இருக்கிறதா என்று கேட்டு உரிமையாளருக்கு (தமிழ்ச்செல்வி) போன் பண்ணி கொடுங்கள் நான் பேசுகிறேன் என்று கூறினார்.
அதற்கு வேலைசெய்யும் பெண்ணும் தமிழ்செல்விக்கு போன் போட்டு கொடுத்ததும் இருவரும் வெகுநேரம் பேசி நீங்கள் ஊருக்கு வாருங்கள் ரூ.20 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை ரூ.10 இலட்சம் ரூபாய்க்கு நான் அந்த நகையை உங்களுக்கு தருகிறேன் என்றுகூறினார். இதையடுத்து தமிழ்ச்செல்வியும் இருபது லட்சரூபாய் நகை 10 லட்ச ரூபாய்க்கு கிடைக்கிறது என்ற ஆசையில் நான் ஊருக்கு வந்த உடன் நேராக கடைக்கு வாருங்கள் என்று கூறினார்.
இரண்டு நாட்கள் கழித்து சேலத்தில் இருந்து புறப்பட்டு வடலூர் வந்ததும் அந்த இளைஞர் மற்றும்இருவருடன் மே 4ம்தேதி கடைக்கு நகைகளை எடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வியிடம் அரை கிராம் அளவு கொண்ட நகையை கொடுத்ததும் அதனை பெற்றுக்கொண்டு அருகில் உள்ள நகை கடையில் பரிசோதித்ததில் உண்மை நகை என்று தெரியவந்தது பின்னர் அந்தநகைக்கு பணம் ஏதும் வாங்காமல் உங்களுக்கு நகை வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்து வாங்கி கொள்ளுங்கள் என்று கூறி விட்டு கையில் இருந்த நகை பையை எடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
ஆசை வார்த்தையில் மயங்கி போன தமிழ்ச்செல்வி 6ம்தேதி
வீட்டில் இருந்த மருமகளின் நகையை தனியார் வங்கியில் அடகு வைத்து ரூ.6.90 இலட்சம் மற்றும் வங்கியில் இருந்த டெபாசிட் தொகை ரூ3.10 இலட்சம் என மொத்தம் ரூ.10 இலட்சம் ரூபாயை கையில் வைத்துகொண்டு அந்த நபருக்கு போன் செய்தபோது அவர் நான் கும்பகோணத்தில் இருக்கிறேன் இங்குவந்து வாங்கிகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து தமிழ்ச்செல்வி வீட்டில் உள்ள தனது மகன் நிர்மல்குமார் மருமகள் ரம்யா இவர்கள் யாருக்கும் தெரியாமல் ரூபாய் 10 லட்சத்தை தனியாக எடுத்துக்கொண்டு வடலூரில் இருந்து எடுத்துக்கொண்டு கும்பகோணம் சென்றார். அங்கு பேருந்து நிலையத்தில் இறங்கி அந்த வட மாநிலத்தவர்களுக்கு போன் செய்து ஒருமணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்த வட மாநிலத்தவர் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் நபரிடம் நகையை வாங்கி கொண்டு ரூ.10 இலட்சம் கொடுத்துள்ளார்.
பின்னர்
தமிழ்ச்செல்வியை ஆட்டோ மூலம் பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வடலூருக்கு வீட்டுக்கு வந்த தமிழ்ச்செல்வி அந்த நகைகளை பரிசோதனை செய்தபோது அவை அனைத்தும் தங்கமுலாம் பூசப்பட்ட போலிநகைகள் என தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்தவர் அந்த வாலிபரின் மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.பின்னர் இச்சம்பவம் குறித்து வீட்டில் உள்ள மகன் மற்றும் மருமகளிடம் கூறியுள்ளார்.
இதனால் பெரும்அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து வடலூர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்து புகார் அளித்த போது சம்பவம் நடைபெற்ற இடம் கும்பகோணம் என்பதால் அங்கு சென்று புகார் கொடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். மேலும் உடனே புறப்பட்டு கும்பகோணம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். கும்பகோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு புகாரைப் பெற்றுக் கொள்ளாமல் வடலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் எனக்கூறி அலைக்கழித்தனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த தமிழ்ச்செல்வி குடும்பத்தினர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இது குறித்து வடலூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.