முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார்
கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் கருவேல மரங்கள், குப்பை தேக்கம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் – பொதுமக்கள் அச்சம்
கமுதி மே 14
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள காத்தனேந்தல் ஊராட்சி பறையங்குளம் கிராமத்தில், வீடுகளைச் சுற்றிய பகுதிகளில் அதிக அளவில் கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்த நிலையில் காணப்படுவதால், அப்பகுதியில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, கருவேல மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதால், அதில் விஷ பூச்சிகள், பாம்புகள் உள்ளிட்ட ஆபத்தான உயிரினங்கள் தங்கி, வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மிகுந்த பயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், குப்பைகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, கிராமத்தில் மர்ம காய்ச்சல் பரவும் சூழ்நிலை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மழைக்காலங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு காய்ச்சல் பரவும் நிலையில், தற்போது கோடைகாலத்திலும் மர்ம காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முருகேசன் மகன் ராமர் கூறுகையில், கிராமத்திற்குள் தனிப்பட்ட நபர்களின் இடங்களிலும் அதிக அளவில் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் சுகாதார பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக கருவேல மரங்களை அகற்றி, குப்பைகளை முழுமையாக சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தினார்.
இதனால், பறையங்குளம் கிராமத்தில் நிலவி வரும் சுகாதார அச்சுறுத்தலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.