ரேஷன் கடைகளில் பொருட்களை பேக்கிங் செய்து வழங்க வேண்டும் முதலமைச்சருக்கு கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பேக்கிங் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் முதலமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை எடை போட்டு வழங்கும் முறையில் பல்வேறு குறைபாடுகள் தொடர்ந்து இருந்து வருவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.
குறிப்பாக, கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் எடை குறைவு இருப்பதை நேரில் கண்டறிந்தேன். இதனால் அரசின் சார்பில் வழங்கப்படும் பொருட்கள் முழுமையாக பொதுமக்களை சென்றடைவதில் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், எடை குறைவு மட்டுமின்றி ரேஷன் பொருட்கள் முறைகேடாக வெளிச்சந்தைக்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
எனவே, ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் குறிப்பிட்ட எடையில் முறையாக பேக்கிங் செய்து வழங்கும் நடைமுறையை கொஷண்டு வர வேண்டும்.
இதன்மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் எடையில் வெளிப்படைத்தன்மை ஏற்படும். எடை குறைவு உள்ளிட்ட முறைகேடுகளை எளிதில் கண்டறிந்து தடுக்க முடியும். மேலும், ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதையும் கட்டுப்படுத்த முடியும்.
எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை பேக்கிங் செய்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சரும், உணவுத்துறை அமைச்சரும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்