வயல்வளம் செழிக்கப் பெய்கின்ற பெயல்மழை மேகம் போல், தமிழ்நிலம் செழிக்கத் தவழ்கின்ற தனிப்பெரும் செய்தி நாளிதழ் ‘தினமலர்’ ஆகும். உ
லசுத் தமிழர் இல்லங்களில் நுழைந்து, அவர்தம் உள்ளங்களில் புகுந்து, தனித்துவம் மிக்க எளிய தமிழால், செய்தி சொல்லும் செம்மாந்த தினமலர் இன்று பவளவிழாக் காண்கிறது.

1951ம் ஆண்டில் டி.வி.இராமசுப்பையர் என்னும் திருமகனாரால் உருவானது ‘தினமலர்’
பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தளியர் மகாதேவர் கோவில்தான் டி.வி.இராமசுப்பையரின் பிறத்த ஊர். பிறப்பால் உயர்வும் இல்லை; பிறப்பால் தாழ்வுமில்லை’ என்ற சமவுணர்வுச் சிந்தனை உடையவர் அவர். சின்னஞ் சிறுவயது முதலே எண்ணம் உயர்வாகக் கொண்டிருந்தவர். பிறந்த தமிழ்நாட்டுக்கு பிடிமண் அளவாவது உழைக்கவேண்டும் எண்ற சுடுத்துப்பாட்டில் கலந்து நின்றவர்.


தமிழர்கள் அதிகம் வாழும் கன்னியாகுமரி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருப்பதை விட, தாய்த் தமிழ்நாட்ட்டோடு இருப்பதே நியாயம் என்ற ஆணித்தரமான கருத்தை முன்னெடுத்த தமிழ்ப் பெரியோர்களில் இவரும் ஒருவர் இவரது ‘தினமலர்’ நாளிதழ் தமிழ் மக்களின் எண்ணங்களை, எழுத்துகளில் பவளமாகப் பதித்தது.


தமிழ், தமிழர் குறித்த உயர்வான சிந்தனைகளைத் திசைகள் நான்கிலும் சுமத்துசென்றது தமிழகத்தின் வரைபடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இன்று காணப்படுவதற்கு, அன்று களமாடிய தமிழ் நாளிதழ் ‘தினமலர்’தான் என்பதில் தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்


அறியா சனங்களும் அரியாசனங்களில் அமர வேண்டும் என்ற அடர்ந்த சிந்தனையோடு செயல்பட்ட அற்புத மாமனிதர் டி.வி.இராமசுப்பையர். ‘தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் கிடையாது; சமூகத்தில் யாவரும் சமம்’ என்ற உயரிய சிந்தனையின் ஊற்றாகத் திகழ்ந்தவர். ‘தாழ்த்தப்பட்டோர்’ என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்குத் தாம்பூலம் வைத்து தனிப்பெரும் மாநாடு நடத்திய டி.வி.இராம சுப்பையரின் பொன்னுள்ளத்தை என்னவென்று புகழ்வது? எளியோர் வீட்டுப் பிள்ளைகளின் கல்விக்காகத் தனது பொருள் தந்து மனது மகிழ்ந்த இந்த மாமனிதரை என்னவென்று வாழ்த்துவது?


ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு டி.வி.இராமசுப்பையர் ஓர் அற்புத எடுத்துக்காட்டு. அவரின் சாதனைகளை தலைமுறைத் தலைமுறையாக இளையோர் உணர வேண்டும் என்பதற்காக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், டி.வி.இராம சுப்பையர் அறக்கட்டளை’ உருவாக்கப்பட்டுள்ளது. அது, இன்றுவரை, தொடர்ந்து, அவரின் சாதனைகளைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.


டி .வி. இராமசுப்பையரைத் தொடர்ந்து அவரது திருமகனார் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் தினமலரை மிகச் சீரோடும் சிறப்போடும் வழிநடத்தி வந்தமையை தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும் .தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் ,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ள இராமசுப்பையர் அறக்கட்டளையில், இவர் ஆற்றிய நாணயவியல் குறித்த சொற்பொழிவுகள் காலத்தால் அழியாதவை. ஆய்வுக் களத்தில் எண்ணற்ற மாணவர்களை வழிநடத்துபவை.


நாணயவியலுக்காக இவர் ஆற்றிய பங்களிப்புகள் ஆய்வுலகில் புதிய அத்தியாயத்தை படைத்தன என்றால் அது மிகையாகாது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று அகழாய்வுகள் மேற்கொண்டு சேர, சோழ, பாண்டிய ,ரோமானிய , கிரேக்கநாணயங்களைத்தோண்டி எடுத்துத் தூசு தட்டித் துடைத்து ஆவணப்படுத்திய வரலாற்றுத் தமிழ்த் தொண்டு வாய்மொழிந்து போற்றத்தக்கது.”சங்க காலத் தமிழ் நாணயங்கள்” என்ற அவரது புத்தகம் தனித்துவம் வாய்ந்தது .

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடைசியாக நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவில் பேசும் பொழுது ,உலக நாணயங்களை எல்லாம் ஒன்று திரட்டி உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நாணயவியல் அருங்காட்சியகம் நிறுவ வேண்டும் என்ற தனது வேண்டுகோளை முன் வைத்தார்.

டி . வி. இராமசுப்பையர் ,ஆர் .கிருஷ்ணமூர்த்தி என்ற இருபெரும் இமயங்களின் இயக்கத்தால் இன்று வரை தளராத தமிழ் நடை போட்டுப் பயணித்து வருகிறது தினமலர்.

பங்குச்சந்தை நிலவரங்கள் குறித்தும் உலகப் பொருளாதார நிலவரம் குறித்தும் இரண்டு பக்கங்களை ஒதுக்கீடு செய்து ,பெருமளவு செய்தி தரும் நாள்இதழ் தினமலர் மட்டுமே. சிறுவர்களுக்குச் சிறுவர் மலர்.. வாரக்கடைசியில் வாரமலர்.. குடும்பத் தலைவிகளுக்குக் குடும்பமலர்.. ஆன்மீக நண்பர்களுக்காக ஆன்மீக மலர்.. மாணவர்களுக்காக மாணவர் மலர் என மலர் மலராய் மலர்ந்து சமூகத்தை மலர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகிறது தினமலர்.


அன்று சிறுவர் மலரில் படித்தவர்களும் சிறுவர் மலரில் பங்கேற்றவர்களும் இன்று இந்திய ஆட்சிப் பணிகளில் இடம்பெற்று இருக்கிறார்கள். எண்ணற்ற மாணவர்கள் ஆய்வுத் துறைகளில் தடம் பதித்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப் பெறும் தேர்வுகளுக்கு நடப்பியல் செய்திகளைத் தரும் தேர்ந்த நாளிதழாகவும் தினமலர் திகழ்கிறது.

மலர்கள் ஒரு நாளிலேயே வாடி விடும். ஆனால், 75 ஆண்டுகளாக வாடாத ஒரு மலர் ‘தினமலர்’ மட்டுமே. வாடாத தமிழ் வார்த்தைகளே அதன் வாசம். அதற்கு காரணம், சமூகத்தின் மீது கொண்டிருக்கும் அதன் நேசம். பைந்தமிழ் வளர்த்த டி.வி.இராம சுப்பையர் வழியில் பவள விழா காணும் ‘தினமலர்’ நுாறாண்டைக் கடந்து தமிழ் சமூகத்தின் உயர்வுக்கு வழிகாட்டட்டும்.

வாழ்த்துகளுடன்
கோ.விசயராகவன்
முன்னாள் இயக்குனர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *