தமிழ் திரையிசை உலகின் சகாப்தமான ‘இசைஞானி’ இளையராஜா அவர்களின் இசைப் பயணம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காண்பதை முன்னிட்டு, கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்த கலைஞர் UMT. ராஜா, ஒரு தனித்துவமான கலைப் படைப்பின் மூலம் தனது இசைப் பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.


​இசைஞானியின் 50 ஆண்டுகால இசைச் சாதனையைப் போற்றும் வகையில், கலைஞர் UMT. ராஜா சரியாக 50 மணி நேரத்தை செலவிட்டு, இரண்டு நாட்களாக அயராது உழைத்து இந்த ‘சுடர் ஓவியத்தை’ (Fire Art) வரைந்து முடித்துள்ளார். 50 ஆண்டுகால இசைச் சேவைக்கு, 50 மணி நேர உழைப்பைச் சமர்ப்பணம் செய்வது இக்கலைஞரின் நுணுக்கமான திட்டமிடலைக் காட்டுகிறது.

​சாதாரண தூரிகைகளுக்குப் பதிலாக ‘கேஸ் கன் பர்னர்’ (Gas Gun Burner) நெருப்பைப் பயன்படுத்தி, மிகக் கவனமாக இந்த சுடர் ஓவியத்தை அவர் வடிவமைத்துள்ளார். நெருப்பு கட்டுக்கடங்காமல் ஓவியத்தைப் பாதிக்காத வண்ணம், இசையின் அடையாளமான சிறிய கிட்டார் தகடு ஒன்றை தடுப்பாகப் பயன்படுத்தி, இளையராஜா அவர்கள் இசையமைப்பது போன்ற தத்ரூபமான காட்சியைக் கண்முன் நிறுத்தியுள்ளார்.

​இந்த ஓவியத்தின் கீழே, “இளையராஜா 50” என்று பொறித்து, “நேற்று இல்லை, நாளை இல்லை, எப்பவும் நீ ராஜா!” என்ற வாழ்த்து வாசகங்களையும் கலைஞர் எழுதியுள்ளார்.
​இது குறித்து கலைஞர் UMT. ராஜா கூறுகையில், “இசைஞானியின் 50 ஆண்டுகால இசை உழைப்பை போற்றும் விதமாகவே, இந்த ஓவியத்தை 50 மணி நேரம் கொண்டு வரைந்துள்ளேன். ஒரு இசை ரசிகனாக நான் செய்யும் இந்த சுடர் ஓவியத்தை, இசை மேதை இளையராஜா அவர்களுக்கு நேரில் சென்று நினைவுப் பரிசாக வழங்க ஆவலாக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
​நெருப்பைக் கொண்டு வரையப்பட்ட இந்த வித்தியாசமான மற்றும் உணர்வுப்பூர்வமான ஓவியம், இசை ரசிகர்களிடையேயும் கலை ஆர்வலர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *