தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420
தாராபுரம் நகர மையத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் ஆவேச மனு.
“20 ஆண்டுகளாக போராடியும் தீர்வு இல்லை” – கோட்டாட்சியர் அலுவலகத்தில் வணிகர்கள், பொதுமக்கள் முறையீடு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரின் முக்கிய வணிக மற்றும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ள எண்.எண். பேட்டை கடைவீதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடை எண் 3438-ஐ உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பூக்கடைக்காரர் பகுதி அருகே நகர மையத்தில் இயங்கி வரும் இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள், பெண்கள், மாணவ மாணவிகள் மற்றும் வியாபாரிகள் பல ஆண்டுகளாக கடும் அவதிகளை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி, கோயில் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் தினமும் இந்தக் கடை முன்பாக செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் சமூக ரீதியான பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் மனுக்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் தாராபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
தமிழ்நாடு வர்த்தக அணி மாநில துணைத் தலைவரும் தாராபுரம் வர்த்தக சங்கத் தலைவருமான ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மனு அளிப்பு நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஞானசேகரன் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். பலமுறை காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தோம். பல கட்ட போராட்டங்களும் நடத்தினோம். போராட்டங்களில் ஈடுபட்ட எங்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவங்களும் உள்ளன. இருந்தபோதிலும் இந்தக் கடை தொடர்ந்து அதே இடத்தில் செயல்பட்டு வருகிறது. நகரின் முக்கிய பிரச்சினையாக உள்ள இந்தக் கடையை அகற்றாமல், வேறு பகுதிகளில் உள்ள கடைகளை மட்டும் அரசு அகற்றியுள்ளது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்தக் கடை செயல்பட்டு வருவதால் அதிகாலை முதலே மதுபிரியர்கள் அப்பகுதியில் கூடுகின்றனர். மது அருந்திவிட்டு சாலையோரங்களில் படுத்து உறங்குவது, போக்குவரத்துக்கு இடையூறு செய்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. இதனால் பெண்கள் மற்றும் குடும்பத்தினருடன் வரும் பொதுமக்கள் கடும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்,” என தெரிவித்தார்.
பொதுமக்களில் ஒருவரான மகேஷ் குமார் கூறுகையில், “இந்த டாஸ்மாக் கடைக்கு அருகில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பல வணிக நிறுவனங்கள் உள்ளன. அனைத்தும் சுமார் 300 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளன. இந்த உண்மைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசுக்கு முறையாக எடுத்துச் செல்லவில்லை. தொடர்ந்து மது அருந்திவிட்டு அரைகுறை ஆடைகளுடன் சுற்றித் திரிவோர் பெண்களை தகாத வார்த்தைகளால் அவமதிக்கும் நிலை உள்ளது. இதனால் பெண்கள் மற்றும் மாணவிகள் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்தக் கடையை அகற்ற வேண்டும்,” என்றார்.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்திய இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டினர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தாராபுரம் நகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றி, பொதுமக்களின் பாதுகாப்பையும் சமூக நலனையும் உறுதி செய்ய தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.