நாகப்பட்டினம்,மே.22-
திட்டச்சேரியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு சரிசெய்யப்படுமா? தண்ணீர் வீணாகி செல்வதால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் நாகை மாவட்டம் திருமருகல் அருகே டேங்கில் சேகரிக்கப்படுகிறது. இதில் இருந்து ராட்சத குழாய் மூலமாக திட்டச்சேரி, நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யம் வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குடி தண்ணீர் இதன் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாகூர்-நன்னிலம் சாலையில் திட்டச்சேரி ஓ.என்.ஜி.சி சாலை அருகில் குடிநீர் குழாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்கள் ஆகிறது. அதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதுவரை சரி செய்யாததால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வாய்க்காலில் செல்கிறது. மேலும் இரவு நேரத்தில் அதிக அழுத்தம் காரணமாக உடைப்பு பகுதியில் இருந்து தண்ணீர் அதிகளவு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் பெறும் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது. மேலும் வீணாகும் குடிநீர் வாய்க்கால் கரையை அரித்து செல்வதால் சாலையோரம் மண் சரிந்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது..
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.