நாமக்கல் மாவட்டம். பரமத்தி

கல்குவாரி அனுமதி ரத்து செய்ய வேண்டும் இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்

திருச்செங்கோடு கோட்ட விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் பரபரப்பு – கல் குவாரி அனுமதி ரத்து கோரி விவசாயிகள் முற்றுகை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பரமத்திவேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் கோட்டாட்சியர் லெனின் தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.

கூட்டத்தின் போது, திருச்செங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட அக்களாம்பட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள கல் குவாரிக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

விவசாயிகள் தரப்பில் பேசும்போது, கல் குவாரி செயல்பாட்டால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளதாகவும், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் குற்றம்சாட்டினர். மேலும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துகளை முழுமையாக கேட்காமல் முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கையை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் திருப்திகரமான பதில் அளிக்கப்படவில்லை என கூறிய விவசாயிகள், “உரிய பதில் கிடைக்கும் வரை கூட்ட அரங்கில் இருந்து கலைந்து செல்ல மாட்டோம்” என்று அறிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு நிலவியது. 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *