சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது,மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி பேட்டி…
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், கடந்த 21ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில் சிறுமி காணாமல் போனதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையை தீவிரப்படுத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. அதன்பேரில், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி என்ற நபர் மீது சந்தேகம் திரும்பியது. தொடர்ந்து காவல்துறையினர் கண்ணம்பாளையம் பகுதியில் அவரை கைது செய்தனர். கைது செய்யும் போது தப்பிக்க முயன்றதால், கார்த்திக்கு கால் முறிவு ஏற்பட்டதாகவும், தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
விசாரணையின் போது, குற்றவாளி கார்த்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மருத்துவர்களின் அறிக்கையின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக மோகன்ராஜ் என்ற மற்றொரு நபர் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கார்த்தி மற்றும் மோகன்ராஜ் இருவரும் கூலித் தொழிலாளர்கள் என்றும், குற்றம் நடைபெறுவதற்கு முன்பு மோகன்ராஜ் கார்த்தியுடன் பேசியிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி தனது வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, குற்றவாளி அழைத்து சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரம்யா பாரதி தெரிவித்தார்.