தூயதமிழ் பயிற்சிப் பட்டறை நிறைவு விழா
தூயதமிழ் இளைஞர் பாசறை மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சுப்பீரியர் கிங்ஸ் சார்பாக 15 நாட்கள் தூயதமிழ் பயிற்சிப் பட்டறை சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அதன் நிறைவு நாளில் முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பம்சமமாக தூயதமிழ் பயிற்சிப் பட்டறை நிறைவு விழா, மாணாக்கர்களுக்குப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கும் விழா, ர.கண்ணன் எழுதிய காண்டீபனும் கர்ணனும் நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக மாணவச் செல்வங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவிற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் இயக்குநர் பேராசிரியர் முனைவர் அர.விஜயராகவன் அவர்கள் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சாவித்திரி ஒளிப்பட நிலையத்தின் உரிமையாளர் நூ.ந.பரஸ்ராம் அவர்கள் அனைத்து மாணாக்கர்களுக்கும் நற்சான்றிதழ் மற்றும் புத்தகப்பரிசு வழங்கி உரையாற்றினார்.
தொடர்ந்து விழாவில் நூலாசிரியர் ர.கண்ணன் அவர்கள் எழுதிய ‘காண்டீபனும் கர்ணனும்’ நூலை உலகத் திருக்குறள் ஆய்வுக் கழகத் தலைவர் முனைவர்.மு.க அன்வர் பாட்சா அவர்கள் வெளியிட எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளரான அரங்க இல.வள்ளியப்பன் அவர்கள் மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் அறிவாசான் க.அம்சப்ரியா அவர்களும் நூலைப் பெற்றுக் கொண்டு உரை நிகழ்த்தினர்.
தொடர்ந்து மாணாக்கர்களுக்கு கனடா தமிழாழிப் பேரவையின் பன்னாட்டு இணைப்பாளர் கலையாழி தங்க தினேசு மகிழ்வுரையாற்றினார். விழாவில் அரசினர் மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் வெ.இராஜேந்திரன், கலாவதி அவர்கள், திருக்குறள் கணேசன், லயன் கார்த்திக் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
உலக சாதனையாளர் பாவலர் சு.கதிர்வேல் நன்றியுரை ஆற்றினார். முப்பெரும் விழாவில் தமிழ் ஈடுபாட்டாளர்கள், தூயதமிழ் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டுச் சிறப்பித்தனர். விழாவில் அனைவருக்கும் நீர் மோர் வழங்கப்பட்டது. விழாவினை அ.பால்ராஜ் மற்றும் செ.யாழினி தேவி இருவரும் தொகுத்து வழங்கினர். விழாவினை தூயதமிழ் இளைஞர் பாசறையின் நிறுவுநர் மற்றும் இயக்குர் தமிழ் மணிகண்டன் ஒருங்கிணைத்திருந்தார். லயன் வெங்கடகிருஷ்ணன் அவர்கள் ஊக்கம் தந்திருந்தார். கலந்து கொண்ட அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் சான்றிதழும் புத்தகப் பரிசும் வழங்கப்பட்டது.
15 நாட்களும் லயன்ஸ் அரங்கில் மாணாக்கர்களுக்குப் பிழையின்றித் தமிழ்ப் பேச எழுத மற்றும் படிப்பதற்காக தமிழ் மணிகண்டன் அவர்கள் தூயதமிழில் கற்பித்தார். விழாவில் மாணாக்கர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அனைவரும் பார்த்து வாழ்த்தினர்.