தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் அதிமுக கட்சி தலைமைக்கு அதிர்ச்சி!
முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் முன்னிலையில் 500 பேர் தவெகவில் இணைவு.

“கூண்டோடு காலியானது அதிமுக” முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம்– பரபரப்பு பேச்சு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் அறிமுக கூட்டமும், அதிமுக நிர்வாகிகள் இணைப்பு விழாவும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக மாவட்டத் தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுக முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம், ஆவின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் போது, முன்னாள் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் பி.கே.ராஜு, முன்னாள் யூனியன் சேர்மன் பானுமதி, நகர பொருளாளர் சாமுவேல் உள்ளிட்ட நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட 900-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.

“எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களின் உணர்வை மதிக்கவில்லை”

முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கடும் விமர்சனம்

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம்,
“நான் தாராபுரத்தில் பிறந்து வளர்ந்தவன். புரட்சித் தலைவர் எம்ஜிஆரும், புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவும் எனக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கினர். அவர்களின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

அம்மா மறைவுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலே சென்றது. ஆரம்பத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடரும் என நம்பினேன். ஆனால் தொடர்ந்து 10 தோல்விகள் ஏற்பட்டன. 2026 தேர்தலில் அதிமுக 11-வது தோல்வியை சந்தித்தது.

கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எண்ணங்களை எடப்பாடி பழனிச்சாமி மதிக்கவில்லை. முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து நீக்கப்பட்டனர். இதனால் எங்களுடன் இருந்த நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவிலிருந்து விலக முடிவு செய்தனர்.

தவெக தலைவர் விஜய், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஆட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கையால் நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளோம்,” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

“தாராபுரத்தில் அதிமுக கூடாரம் காலியானது”

மேலும் அவர் பேசுகையில்,
“ஏற்கனவே ஒன்றிய பகுதிகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளனர். தற்போது மீதமுள்ள நகர நிர்வாகிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தவெகவில் இணைந்துள்ளனர். இதனால் தாராபுரத்தில் அதிமுக கூடாரம் முழுமையாக காலியான நிலை ஏற்பட்டுள்ளது,” என்றார்.

மேலும், “இன்னும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் விரைவில் தவெகவில் இணைய உள்ளனர்,” என்றும் தெரிவித்தார்.

“உள்ளாட்சித் தேர்தலில் அடிமட்ட தொண்டர்களுக்கு வாய்ப்பு”

தவெக மாவட்டத் செயலாளர் யுவராஜ் உறுதி.

கூட்டத்தில் பேசிய தவெக மாவட்டத் தலைவர் யுவராஜ்,
“எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் போட்டியிட வேண்டும். அவர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

டாஸ்மாக் கடை அகற்ற கோரிக்கை.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த யுவராஜ்,
“தாராபுரம் என்.என்.பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது. இதுகுறித்து சமூகநீதித்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் உரிய ஆதாரங்களுடன் தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க நாங்கள் துணை நிற்போம்,” என்றார்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.

தாராபுரத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஒரே நேரத்தில் தவெகவில் இணைந்திருப்பது, அப்பகுதி அரசியல் சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் இந்த நகர்வு, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட அரசியல் கணக்குகளை மாற்றக்கூடிய முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *