நாகப்பட்டினம்,மே.26-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு ரூ. 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி 620 ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது.
நில உரிமையாளர்கள், குத்தகை சாகுபடிதாரர்கள், விவசாய கூலிகளுக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் வழங்க 2163 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு சிபிசிஎல் நிறுவனம் தமிழக அரசிடம் நிதியை ஒப்படைத்துள்ளது. இந்த நிலையில் முறையாக மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி
புதுச்சேரி தமிழக எல்லையான வாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் பாதிக்கப்பட்ட பயனாளிகள் 500-க்கும் மேற்பட்டோர் 4 மணி நேரத்திற்கு மேலாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக நாகப்பட்டினம்-சிதம்பரம், நாகப்பட்டினம்-கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றது. தமிழக அரசு விவசாயிகளை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நிலையில் குறைந்த அளவிலான பயனாளிகளுக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே கணக்கு எடுக்கப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் தொகையை உடனே தமிழக அரசு அதிகாரிகள் வழங்க வேண்டும் என பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நாகப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.