நாகப்பட்டினம்,மே.27-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.
திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்படுகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருட சேவையும், சவுரிராஜ பெருமாள் வீதி உலா நிகழ்ச்சியும் நேற்று முதல் நாள் இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, வருகிற 30-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 31-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தக்கார் மணிகண்டன், செயல் அலுவலர் புவியரசு, கோவில் கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.