கும்பகோணம் .மே.28-

கும்பகோணத்தில் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரின் பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா மைதானங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகையானது தியாகத்தின் அடையாளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையைப் போலவே, பக்ரீத் பண்டிகைக்காகவும் கும்பகோணத்தில் உள்ள பெரிய பள்ளிவாசல், ஹாஜியார் பள்ளிவாசல் உள்ளிட்ட ஏழு ஜமாத்துகள் மற்றும் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்புகள் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகையில் மத அறிஞர்கள் பக்ரீத் திருநாளின் முக்கியத்துவம், தியாகத்தின் அவசியம், மனிதநேயம் மற்றும் சகோதரத்துவம் குறித்து உரையாற்றினர்.சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்குப்
பிறகு, உலக அமைதிக்காகவும், நாட்டில் நல்லிணக்கம் வளரவும்.
அனைத்து சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழவும், ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெறவும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.

வாழ்த்துகள் பரிமாற்றம்

தொழுகை முடிவடைந்ததும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ‘ஈத் முபாரக்’ கூறி பக்ரீத் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர்.

இதேபோல், கும்பகோணம் சாந்தி நகர் திடல், மேலக்காவேரி, ஆடுதுறை, அவணியாபுரம், திருநாகேஸ்வரம், திருமங்கலக்குடி, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, கோணுளாம்பள்ளம் மற்றும் சோழபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

தொழுகைக்குப் பின்னர், இஸ்லாமியர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் இனிப்புகளையும், உணவுகளையும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேலும், பிற மதத்தைச் சேர்ந்த நண்பர்களும் இஸ்லாமியர்களுக்கு நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த பண்டிகையை முன்னிட்டு, கும்பகோணம் பகுதி முழுவதும் சகோதரத்துவமும், அன்பும் தழைத்தோங்கியிருந்தது.

இதனை அடுத்து இஸ்லாமிய மரபுப்படி குர்பானி கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. குர்பானி இறைச்சி ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு, பகிர்வு மற்றும் பரிவு உணர்வு வெளிப்படுத்தப்பட்டது. பல இடங்களில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பக்ரீத் திருநாளை
யொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

[படம்: கும்பகோணம் சாந்தி நகர் திடலில் நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்ட காட்சி.]

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *