நாகப்பட்டினம்,ஜூன்.4-
திருமருகல் ஒன்றியத்தில் கோடை விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் நேற்று பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜூன் மாதம் 4-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி கடந்த சில நாட்களாக பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. மேலும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்
தமிழக அரசு அறிவித்தபடி தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. திருமருகல் ஒன்றியத்தில் 95 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அப்போது காலை முதலே புதிய சீருடை அணிந்து மாணவ-மாணவிகள் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். பெரும்பாலான பள்ளிகளில் நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
ஆரத்தி எடுத்த ஆசிரியர்கள்
திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் (பொ) அகல்யா தலைமையில் ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளிக்கு வந்து மாணவ-மாணவிகள் தங்களது நண்பர்களை சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகளை வழங்கினர். அதே போல் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தலைமையிலும், திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மகேஸ்வரன் தலைமையிலும், திட்டச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம் தலைமையிலும் மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.