கரூர் செய்தியாளர் மரியான் பாபு
புகழுர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு..
கரூர் மாவட்ட ஆட்சியர் சி.முத்துக்குமரன் இ,ஆ,ப. மண்மங்கலம் மற்றும் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் தரமான மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் உயரிய, தரமான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் மண்மங்கலம் மற்றும் வேலாயுதம்பாளையம் அரசுமருத்துவமனைகளில் உள்ள வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை, மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சை போன்ற அத்தியாவசிய சேவைகள் குறித்தும்,
நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் ஊசி மருந்துகளின் தரம், அவற்றை பராமரிக்கும் முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டு புற்றுநோய், இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளை பொதுமக்களுக்கு தரமாக,உரிய கால அளவில் வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதின் மூலம் சமூக ஆரோக்கியத்தை உறுதி செய்திட முடியும்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சி.முத்துக்குமரன் இ,ஆ,ப. தெரிவித்தார்.
பின்னர் மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டட கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கட்டுமானப்பணிகளை தரமாகவும் உரிய கால அளவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக செல்லாண்டிபாளையம் மற்றும் கோவிந்தம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல்,சளி,இருமல் போன்ற பொதுவான நோய்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பரிசோதனை, பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கவனிப்பு, மற்றும் பிரசவ கால உதவி குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து அரசு தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுளளதையும், இரத்தப் பரிசோதனை,சிறுநீர் பரிசோதனை போன்ற அடிப்படை மருத்துவ ஆய்வக வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் புகழுர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் வருமானச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு சேவைகள் மற்றும் நிலுவையில் உள்ள நிலம் தொடர்பான பதிவுகள், பட்டா மாற்றம், நில அளவை தொடர்பான பணிகளை காலதாமதமின்றி விரைவாக வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.செழியன், துனை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.