கோவை
வருங்கால அரசியலில் நடிகர் விஜய் மற்றும் அண்ணாமலை ஆகியோர் முக்கிய சக்திகளாக இருப்பார்கள் – முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி பேட்டி…
பாஜகவிலிருந்து விலகியுள்ள அண்ணாமலை தொடங்கியுள்ள “We The Leader” இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என அவரது தீவிர ஆதரவாளரும், முன்னாள் பாஜக மாவட்ட தலைவருமான பாலாஜி உத்தமராமசாமி தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணாமலை புதிய அரசியல் பயணத்தை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இந்த இயக்கம் அனைத்து அரசியல் இயக்கங்களையும் பின்னுக்குத் தள்ளி முன்னணிக்கு வரும் என்றும், தற்போது உயர்கல்வி மற்றும் உயர்பதவிகளில் உள்ள பொதுமக்கள் உட்பட பலர் இதில் இணைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாஜகவிலிருந்து மட்டுமல்லாமல் இதுவரை அரசியலுடன் தொடர்பில்லாத பொதுமக்களும் இயக்கத்தில் இணைந்து வருவதாக கூறிய அவர், அண்ணாமலையின் நேர்மையான அரசியல் அணுகுமுறையே இதற்கு காரணம் என்றார். அடுத்த தேர்தலில் போட்டியிடும் திட்டம் இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ள நிலையில், அது உள்ளாட்சி தேர்தலாக இருக்கலாம் என்றும், அதுகுறித்த இறுதி முடிவை அண்ணாமலையே எடுப்பார் என்றும் தெரிவித்தார்.
இயக்கத்தின் கொள்கை குறித்து பேசிய பாலாஜி உத்தமராமசாமி, தமிழக மக்களின் நலனை மையமாகக் கொண்ட அரசியலே முன்னெடுக்கப்படும் என்றும், “தமிழகம் முதன்மை, இந்தியா அடுத்த நிலை” என்ற அணுகுமுறையுடன் செயல்படப்படும் என்றும் கூறினார். அண்ணாமலை முன்வைக்கும் கொள்கைகளே இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளாக இருக்கும் என்றார்.
பாஜக ஒரு தேசிய அளவிலான பெரிய இயக்கம் என்பதால் அது பலவீனமடைந்துவிட்டது என்று கூறுவது தவறு என தெரிவித்த அவர், அண்ணாமலையின் வேகம் மற்றும் அரசியல் செயல்பாட்டு பாணிக்கு ஏற்ற சுதந்திரமான சூழல் தேவைப்பட்டதால் அவர் தனிப் பாதையை தேர்வு செய்ததாக கூறினார். தவறுகள் எங்கு நடந்தாலும் உடனடியாக கேள்வி எழுப்பும் தன்மையே அண்ணாமலையின் முக்கிய குணம் என்றும் குறிப்பிட்டார்.
பாஜகவின் சித்தாந்தம் வேறு, தங்களது சிந்தனை வேறு இருக்கும் என்றும், அண்ணாமலைக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று கூறுவோர் பலர் ராஜினாமா செய்து அவருடன் இணைந்து வருவதை கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், “அண்ணாமலை ஒரு கட்சியில் நிர்வாகியாக இருப்பதை விட சுயமாக முடிவெடுக்கக்கூடிய தலைவராக இருக்க விரும்புகிறார். அதற்காகவே அவர் தனி அரசியல் பாதையை தேர்வு செய்துள்ளார்” என்றார்.
வருங்கால அரசியலில் நடிகர் விஜய் மற்றும் அண்ணாமலை ஆகியோர் முக்கிய சக்திகளாக இருப்பார்கள் என்றும், தமிழகத்திற்கு அறிவார்ந்த நிர்வாகம் தேவைப்படுவதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்களின் அரசியலில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. நேர்மையான அரசியலை விரும்பும் பொதுமக்களே எங்களின் இலக்கு. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைத் தாண்டி தவெக உருவாகியுள்ள நிலையில், அதையும் தாண்டி எங்களது இயக்கம் மிகப்பெரிய அரசியல் சக்தியாக வளரும்” என்றார்.