தாராபுரம் செய்தியாளர் பிரபு செல் : 9715328420
தாராபுரம் நகராட்சியில் பரபரப்பு: 15 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல்! தமிழக அரசுக்கு நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் பகிரங்க எச்சரிக்கை!..
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் சாதாரண நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி கூடுதல் பொறுப்பு ஆணையாளர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் கு.பாப்பு கண்ணன் முன்னிலை வகித்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உறுதிமொழி ஏற்புக்குப் பின் நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் பேசியதாவது:
“சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் ஆகும். அதிகரித்து வரும் வெப்பநிலை, மழைப்பொழிவு மாற்றம், காற்று மற்றும் நீர் மாசுபாடு போன்ற சவால்களை எதிர்கொள்ள மரங்களை வளர்ப்பதும், பசுமையைப் பாதுகாப்பதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்தப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். தூய்மையான சுற்றுச்சூழல் தான் ஆரோக்கியமான சமூகத்திற்கும், வளமான எதிர்காலத்திற்கும் அடித்தளமாகும்,” என்று பேசினார்.
குப்பைத் தொட்டியாகும் தாராபுரம்: முதலமைச்சர் மீது சாடல்
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசை விமர்சித்து நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்று 27 நாட்கள் கடந்துவிட்டன. நகராட்சி நிர்வாகத் துறையை முதலமைச்சர் தனது கூடுதல் பொறுப்பாக எடுத்துக்கொண்டு கவனித்து வருகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 25 மாநகராட்சிகளும், 148 நகராட்சிகளும் உள்ளன. தாராபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு 100 சதவீத முதல்நிலை குப்பை சேகரிப்பும், மட்கும், மட்காத குப்பைகளைப் பிரித்து கையாளுதலும் சிறப்பாக நடந்து வந்தன. இதற்காகச் சிறப்புப் பேட்டரி வாகனங்களும், தூய்மைப் பணியாளர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சியில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ‘என் குப்பை என் பொறுப்பு’ போன்ற பிரச்சாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை.
மேலும், கடந்த ஏப்ரல் மாதத்துடன் நகராட்சி குப்பை எடுப்பதற்கான ஒப்பந்தக் காலம் (டெண்டர்) முடிவடைந்தது. அதன் பிறகு இரண்டு மாதங்கள் தமிழக அரசு கால நீட்டிப்பு செய்தது. தற்போது தவெக அரசு பொறுப்பேற்ற பிறகும், மீண்டும் இரண்டு மாதங்களுக்கு அதே ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளனர். இதனால் ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு நிரந்தரமாகப் பணி கிடைக்கப் போவதில்லை என்று நினைத்து, நகர் முழுவதும் குப்பைகளை அகற்றுவதில் கடும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளோ அல்லது நகர்மன்றத் தலைவராகிய நானோ ஒப்பந்ததாரரிடம் நேரடியாகப் பேசினாலும் அவர்கள் சரிவர ஒத்துழைப்பதில்லை. இதனால் தாராபுரம் நகர் முழுவதும் டன் கணக்கில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.
தற்காலிக டெண்டர் வேண்டாம்; நிரந்தரப் பணியாளர்கள் தேவை!
முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சித் துறையில், முறையாக டெண்டர் விடாமல் தாராபுரம் நகராட்சிப் பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களை நிரந்தரத் தூய்மைப் பணியாளர்களாக நியமிக்க முதலமைச்சர் விஜய் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே குப்பைகள் முழுமையாக அகற்றப்படும்; அதிகாரிகளும் பணியாளர்களிடம் வேலை வாங்க முடியும். பொதுமக்களின் குப்பைத் துயரத்திற்கும் உடனடி தீர்வு கிடைக்கும்.
ஆனால், தனது சொந்த கவனிப்பில் இத்துறையை வைத்திருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், இதனைப் பொருட்படுத்தாமல் செயல்பட்டு வருகிறார். இதனால் எங்களுக்குப் பல்வேறு நிர்வாக இடர்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. தற்போது தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நியமிக்கப்பட்டவர்கள், தனியார் நிறுவனத்தின் லாப நோக்கத்திற்கு மட்டுமே வேலை செய்கின்றனர். தாராபுரம் குப்பை நகரமாக மாறுவதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களே காரணமாகிவிடக் கூடாது. உடனடியாக முதலமைச்சர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முடங்கிக் கிடக்கும் வளர்ச்சித் திட்டங்கள்
புதிய பேருந்து நிலையம்: தாராபுரம் பேருந்து நிலையத்தில் கடைகள் கட்டப்பட்டு 90 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகளைத் துரிதப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜவாய்க்கால் பாலங்கள்: தாராபுரத்தில் மூன்று ராஜவாய்க்கால்களின் குறுக்கே பாலங்கள் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
குடிநீர் விநியோகம்: பொதுமக்களுக்குத் தினந்தோறும் குடிநீர் வழங்க ஏற்கனவே திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை இடையூறு செய்யாமல், அதனை முழுமையாகச் செயல்படுத்தி குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15 நாட்கள் கெடு: சாலை மறியல் தீர்மானம் நிறைவேற்றம்!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நகராட்சியின் பிரச்சினைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தாமல், டெண்டரை மேலும் இரண்டு மாதங்களுக்குத் தள்ளிப்போட்டுக் கொண்டே சென்றால் பணிகள் நிறைவு பெறாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள்.
எனவே, நகர்மன்றத் தலைவரான நான், 29 நகர்மன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, வரும் 15 நாட்களுக்குள் இந்த நிர்வாகச் சிக்கல்களுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தமிழக முதலமைச்சரைக் கண்டித்து கவுன்சிலர்களுடன் இணைந்து மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இக்கூட்டத்தில் பகிரங்கமாக எச்சரிக்கிறேன்.
இவ்வாறு நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தெரிவித்தார். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நகர்மன்றக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கூட்டம் நிறைவு பெற்றது.