ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
பொம்மிடி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்: 15 நாளில் இடமாற்றம் என அதிகாரிகள் உறுதி
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே துறிஞ்சிப்பட்டி அடுத்த வடசந்தையூர் 4 ரோட்டில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் எண் 2875 அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த டாஸ்மாக் கடையைச் சுற்றிலும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மது வாங்குபவர்கள் குடியிருப்புப் பகுதிகள், பொதுச் சாலைகள் என பல்வேறு இடங்களில் மது அருந்திவிட்டு, சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளை போதையில் கேலி, கிண்டல் செய்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், ரேஷன் கடைக்குச் செல்லவும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அச்சத்துடன் சென்று வரும் அவல நிலை தொடர்வதாகவும் குற்றம்சாட்டினர்.
இக்கடையை அகற்றக்கோரி கிராம சபைக் கூட்டங்களில் ஏற்கனவே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாக கூறி, இன்று பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவலறிந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில், 15 நாட்களுக்குள் இந்த மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
போராட்டம் காரணமாக இன்று ஒருநாள் மதுபானக் கடை திறக்கப்படவில்லை. கடை திறப்புக்காக காத்திருந்த மதுப்பிரியர்களை, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், “இன்று கடை திறக்காது. மாற்றுக் கடைக்குச் செல்லுங்கள்” என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். கடை திறக்கப்படாததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இப்போராட்டத்தால் வடசந்தையூர் பகுதி காலை முதல் பிற்பகல் வரை பரபரப்புடன் காணப்பட்டது. அதிகாரிகள் அளித்த உத்தரவாதம் நிறைவேற்றப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.