புவனகிரி- ஜூன், 8
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே மணவெளி – ஆலம்பாடி பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.3 கோடி மதிப்பில் 5.5 மீட்டர் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 40 ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையாக இருந்த இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சாலையானது புவனகிரி வழியாக மணவெளி ,ஆலம்பாடி, கிருஷ்ணாபுரம் வழியாக வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி செல்லக்கூடிய சாலையாகும்.
ஆனால், பழைய தார் சாலையை முழுமையாக அகற்றாமல் பெயரளவுக்கு மட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மேல் ஜல்லிகள் கொட்டி சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சாலையில் ஜல்லி பரப்பும் பணிகளும் சீரற்ற முறையில் நடைபெறுவதாகவும், இதனால் சாலை விரைவில் சேதமடையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற தரமற்ற பணிகளால் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து தரமான முறையில் சாலைப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.