தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு: தாராபுரத்தில் பரபரப்பான திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு!
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்.என்.பேட்டை வீதியில் உள்ள 17-வது வார்டு, வைரவன் கோவில் தெரு அருகே ராஜ வாய்க்கால் தரைமட்ட பாலம் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக, அப்பகுதியில் வாய்க்கால் ஓரத்தில் இருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான மின்மாற்றியை (டிரான்ஸ்பார்மர்) தற்காலிகமாக அகற்ற மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
அவ்வாறு அகற்றப்பட்ட மின்மாற்றியை, மாற்று இடமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பைரவன் கோவில் வீதிப் பகுதியில் அமைக்க மின்வாரிய ஊழியர்கள் முயன்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட இடம் வளைவான சாலையாக இருப்பதோடு, சாக்கடை தரைமட்ட பாலமும் உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. மேலும், அதே பகுதியில் கோவில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ளதால், அங்கு மின்மாற்றியை அமைத்தால் கடுமையான விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, குடியிருப்பு பகுதிக்கு பதிலாக வேறு மாற்று இடத்தை தேர்வு செய்து அங்கு மின்மாற்றியை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், மின்வாரிய தரப்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தாராபுரம் பூக்கடை கார்னர் பகுதியில் திடீரென திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கரூர், குண்டடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லவிருந்த பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் நான்கு சாலைகளிலும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனக்கூறி பொதுமக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாராபுரம் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் தாராபுரம் பூக்கடை கார்னர் மற்றும் பெரிய கடை வீதி ஆகிய பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.