திருவாரூர்., ஜூலை.25

பண்டைய சாஸ்திர ஐதீகத்தின் படி திருவாரூர் அருகே திருநாட்டியத்தாங்குடி கிராமத்தில் ஸ்ரீ இறைவன், ஸ்ரீ இறைவி வடிவில் குழந்தைகள் உழவன் – உழத்தியாக மாறி நெல் நாற்றுகட்டுடன் ஊர்வலமாக வந்து ஸ்ரீமாணிக்கவண்ணர் சுவாமி ஆலய வயலில் நெல் நாற்றாங்களை நடவு செய்யும் பாரம்பரிய நடவு திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப பாராம்பரிய ஆகம ஐதீக வழக்கப்படி இறைவன், இறைவு நெல் நடவு செய்த இடமாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், திருநாட்டியத்தான்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாணிக்கவண்ணர் ஆலயத்தின் ஈசான்ய மூலையில் நடவுத்திருவிழா ஆண்டுதோறும் ஆடி கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறுவது ஐதீகம்.
ஆடி கேட்டை நட்சத்திர நாளான இன்று ஸ்ரீமாணிக்கவண்ணர், அம்பாள் ஸ்ரீமங்கலாம்பிகை ஆகியோருக்கு காலை சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் மகாதீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவர் ஸ்ரீமாணிக்கவண்ணர் சன்னதியில் இருந்து நெல் நாற்றங்காலை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பின்னர் மூலஸ்தான சன்னதியில் இருந்து ஸ்ரீ இறைவன், ஸ்ரீ இறைவி வடிவில் உருவெடுத்த சிறு குழந்தைகள் உழவன் உழத்தியாக மாறி பூஜிக்கப்பட்ட நெல் நாற்றங்காளுடன் ஆலய பிரகாரத்தினை வலம் வந்தனர். பின்னர் ஸ்ரீமாணிக்கவண்ணர், ஸ்ரீமங்களாம்பிகை அம்மன் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு மகா தீபாரதனை காட்சி விமர்சாயக நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுடன் உழவன்-உழத்தியாக மாறிய குழந்தைகள் கையில் ஏர்கலப்பை மற்றும் நெல் நாற்றங்காளுடன் முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து ஆலயத்தின் ஈசான்ய மூலையில் அமைந்துள்ள வயலை வந்தடைந்தனர்.
அப்போது நடவு திருவிழா நடைபெறும் வயலில் ஆலயத்தில் இருந்து கடங்களில் பூஜித்து கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தை ஊற்றி இறைவன்-இறைவி வடிவில் உழவன்-உழத்தியாக வேடம் திரித்து வந்த குழந்தைகள் வயலில் இறங்கி தான் கொண்டுவந்த நெல் நாற்றங்களை நடவு செய்து நடவு திருவிழாவினை தொடங்கிவைத்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த திரளான விவசாய பெருமக்கள், பக்தர்கள் வயிலில் நெல் நாற்றங்காலை பக்தியுடன் நடவு செய்து நடவு திருவிழாவினை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
அப்போது நட்டது போதும் இனி நாளை நடலாம் என பதியங்களை பாடி உழவன்-உழத்தியாக வந்த குழந்தைகளை இறைவன் அழைத்து சென்ற ஐதீக பதியங்களை பாடி வழிபாடு நடத்தப்பட்டது. இந்த ஐதீக நடவு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.