கோவை: கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கத்தினர் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அறிக்கை ஒன்று தயாரித்துள்ளனர்.
தங்க விலை உயர்வால் நகை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அரசுக்கு வழங்கப்படும் கோரிக்கைகள் குறித்து உருவாக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
எதிர்பாராத தங்க நகை விலை உயர்வு நகை உற்பத்தி துறையில் MSME நிறுவனங்களுக்கு மூலதன நெருக்கடியையும் ஆபத்தையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் கையிருப்பில் உள்ள இருப்புக்கும் மதிப்பு உயர்வுக்கு வரி விதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பு மூலம், மாற்றீடு முறையை அறிமுகப்படுத்த வேண்டும், உள்நாட்டு விற்பனைக்கான ஏற்றுமதி விலைப்பட்டியல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும், இருப்பு நிலை பட்டியலில் ஒரு தனி கையிருப்பு கணக்கில் வரவு செய்திட அனுமதி வழங்க வேண்டும், ICDSயில் சிறப்பு விதிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும், குறு மற்றும் சிறு நகை உற்பத்தியாளர்களுக்கான ஊக அடிப்படையிலான வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும், சரக்கு மதிப்பீட்டிற்கு LIFO முறையை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அறிக்கையில் முன்வைக்கபட்டு விவரிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோயம்புத்தூர் தங்க நகை தயாரிப்பாளர் சங்க தலைவர் முத்துவெங்கட்ராம், கடந்த 2 ஆண்டுகளில் 140% தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும் FIFO, Weighted Average Method மூலமாக தான் எங்கள் வியாபாரிகள் வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்றும் தற்போதைய சூழலில் மூலதனத்தையே விற்று தான் வரியை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தங்களுக்கு வரிச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர் இது குறித்து தாங்கள் தயாரித்த அறிக்கையை நிதி அமைச்சரிடமும் பியூஸ் கோயலிடமும் கொடுக்க இருப்பதாக கூறினார்.