மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், பணியில் உள்ள தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் தனியார் நிறுவன முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை மாவட்டக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் புதனன்று நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி. செல்வா தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் வேல்தேவா, மாவட்டப் பொருளாளர் கௌதம் பாரதி, மாநிலக் குழு உறுப்பினர் சுகஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரசாந்த், விக்கி, ஆறுமுகம் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் முனியாண்டி, சிந்து மோகன், நந்தா, சரவணன், சிவரஞ்சனி, ஸ்டாலின், ரவி, செந்தில், டீலன் ஜஸ்டின் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில், மதுரை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ‘அவர்லண்ட்’ (OURLAND) என்ற தனியார் நிறுவனம் கற்கள் மற்றும் மண்ணை அகற்றி அவற்றை குப்பைகள் எனக் கணக்கிட்டு பொதுமக்களின் வரிப்பணத்தை முறைகேடாக சுரண்டியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. எனவே, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை உடனடியாக முடக்கி, அதன் நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட்டு, தற்போது பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டது.
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், மதுரை வருவாய் கோட்டாட்சியர், மதுரை வடக்கு வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.