நாகப்பட்டினம்,ஜூன்.10-
நாகை மாவட்டம் காடம்பாடியில் ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும். இதில் ஆண்டுக்கு 300 முதல் 600 மாணவர்கள் வரை படித்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஓராண்டு காலமாக கல்லூரி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சுமார் 6 மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.
இருப்பினும் ஆசிரியர்கள் தங்களால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற நலன் கருதி தொடர்ந்து தங்களது பணிகளை செய்து வருகின்றனர். கடன், தவணை, வீட்டு வாடகை, பிள்ளைகளின் கல்வி செலவு, அன்றாட செலவு என பல இடையூறுகளுக்கு இடையில் ஆசிரியர்கள் தங்களது பணியினை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
ஆசிரியர்களின் நலன் கருதி கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரியில் பல்வேறு அறவழிப் போராட்டங்களை செய்தும் இதுவரை கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கல்லூரி முதல்வர் இல்லாமல் செயல்பட்டு வருவதால் கல்லூரியிலிருந்து வெளியேறும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாற்று சான்றிதழ்கள் கிடைக்க பெறாமல் பணிகளுக்கு சென்றும் அங்கீகாரம் இன்றி வேலை செய்து வருவதாகவும், மேலும் கல்லூரி முடித்து மேற்படிப்புக்கு செல்ல வேண்டிய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக இருப்பதால் கல்லூரி நிர்வாகம் உடனடியாக ஆசிரியர்களின் ஊதிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கவும், மாணவர்களின் நலன் கருதி முதல்வரை நியமிக்கவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.