நாகப்பட்டினம்,ஜூன்.10-
திருமருகல் ஒன்றியத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏற்படும் மின்தடையால், ஆழ்துளை கிணறுகளிலிருந்து போதிய தண்ணீர் எடுக்க முடியாமல் இளம் பருத்திப் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஆலத்தூர், அம்பல், போலகம், ஏர்வாடி, கொங்கராயநல்லூர், சேஷமூலை, திருக்கண்ணபுரம், திருப்புகலூர், மருங்கூர், எரவாஞ்சேரி, நெய்குப்பை, கங்களாஞ்சேரி, வாழ்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை பருவத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக, விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிட்டுள்ளனர்.


இப்பகுதியில், குறைந்த மின் அழுத்தம் மற்றும் அறிவிக்கப்படாத நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்தடை, வெயிலின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஆழ்துளை கிணறு வசதியை மட்டும் நம்பி பயிரிடப்பட்டுள்ள பருத்திச் செடிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை.

இதனால், இளம் பயிராக இருக்கும் போதே கருகி வருகின்றன. வங்கிக் கடன், இதர கடன்கள் வாங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிர் காய்ந்து சேதமடைந்து வருவதால், விவசாயிகளுக்கு பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் கூடுதல் மின்மாற்றிகள் அமைத்தால் மும்முனை மின்சார விநியோகம் சீராக நடைபெறும். எனவே, இப்பகுதியில் முன் முனை மின்விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் மின் வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பருத்திப் பயிருக்கு தேவையான தண்ணீர் ஆழ்துளை கிணறு மூலம் கிடைப்பதில்லை. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பருதிச் செடிகள் கருகி சேதமடையும் நிலை ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுடன், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், சேதமடைந்துள்ள பருத்திப் பயிர்களை, வேளாண்மைத் துறையினர் பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க, தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *