தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுவாமிமலை பேரூராட்சியில், பல ஆண்டுகளாக நத்தம் நிலங்களில் குடியிருந்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஆவண குளறுபடி காரணமாக கோவில் நில பட்டா பிரச்சினையால் கடும் அவதிப்பட்டு வரும் நிலையில், ஜமாபந்தி நிகழ்வில் உரிய நியாயம் கேட்டு மனு அளித்தனர்.

சுவாமிமலை வருவாய் கிராமத்தில் உள்ள பல்வேறு சர்வே எண்களில் தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களுக்கு நத்தம் பட்டா வழங்கப்பட வேண்டிய நிலையில், சில கீழ்மட்ட வருவாய்த் துறை அதிகாரிகளின் தவறான ஆவண குளறுபடியால் அந்த நிலங்கள் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் பெயரில் பதிவுசெய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக, பல ஆண்டுகளாக நத்தம் வீட்டுமனைகளில் சட்டப்பூர்வ ஆவணங்களுடன் வசித்து வரும் மக்கள், தங்களது வீடுகளுக்கான சட்டப்பூர்வ உரிமையை உறுதிப்படுத்தும் பட்டா பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

பட்டா கோரி மக்கள் தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்த நிலையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம். எச். ஜவாஹிருல்லா இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நில நிர்வாக ஆணையரகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பலமுறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதுவரை முழுமையான விசாரணையை நிறைவு செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இதற்கிடையில், சமூக ஆர்வலர்களான ஷாஜகான் மற்றும் ஷபானா ஆகியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், கோவில் பெயரில் நத்தம் பட்டா வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் கோவில் நிர்வாகத்திடம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருப்பது இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், வருவாய்த் துறையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிர்வாக குளறுபடியால் பல ஆண்டுகளாக நத்தம் மனைப் பிரிவில் வாழ்ந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, உண்மை நிலையை முழுமையாக ஆய்வு செய்து, கோவில் பெயரில் உள்ள பட்டாவை நீக்கி, தகுதியான மக்களுக்கு உரிய நத்தம் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜூன் 11ஆம் தேதி கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பசலி ஆண்டு 1435 வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்வில், வருவாய்த் துறை அலுவலர்கள் முன்னிலையில் அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர். இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து பல ஆண்டுகளாக நீடித்து வரும் பட்டா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *