கோவை

மதங்களைக் கடந்த மாண்பு ! கயிலாயப் பயணம் முடித்து திரும்பிய பேரூர் அடிகளாருக்கு ‘பல்சமய நல்லுறவு இயக்கத்தினர்’ நெகிழ்ச்சி வரவேற்பு !!

​கோவை மண்ணின் சமய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக, காண்போரை நெகிழச்செய்யும் ஒரு உன்னத நிகழ்வு கோவையில் நடந்துள்ளது.
​பேரூர் தமிழ்மடத்தின் மடாதிபதி தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், புனித கயிலாய மலைக்கு 16 நாட்கள் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருந்தார். தன் ஆன்மீகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அவர் கோவை திரும்பினார். அவரை வரவேற்பதற்காகப் பக்தர்கள் திரண்டிருந்தனர். ஆனால், அங்கு கூடியிருந்த அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழச்செய்த தருணம் ஒன்று அரங்கேறியது.


​அனைத்து மதங்களின் ஒற்றுமையையும், மனிதநேயத்தையும் போற்றி வளர்க்கும் கோவை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி மற்றும் அந்த இயக்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் எனப் பல சமயங்களைச் சேர்ந்தவர்கள் ஓரணியாகத் திரண்டு வந்து பேரூர் அடிகளாரை மிகுந்த அன்போடு வரவேற்றனர். பொன்னாடை போர்த்தி, மலர்க்கொத்து, கிரீடம் அணிபித்து அவர்கள் காட்டிய அன்பு அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
​”சமயங்கள் வேறானாலும் மனிதநேயம் ஒன்றுதான் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ‘பல்சமய நல்லுறவு இயக்கத்தினர்’, கயிலாயப் பயணம் முடித்து வந்த மடாதிபதியை வரவேற்ற விதம், உண்மையான ஆன்மீகம் என்பது மனிதர்களை ஒன்றிணைப்பது மட்டுமே என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

​இந்த நெகிழ்ச்சியான வரவேற்பைத் தொடர்ந்து, மருதாச்சல அடிகளாரும், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி.ஜெ. முகமது ரஃபி அவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். ​பேரூர் மருதாச்சல அடிகளார் பேசியதாவது,


“கயிலாயப் பயணம் என்பது மனதை அமைதிப்படுத்தும் ஒரு ஆன்மீக அனுபவம். நான் பயணம் முடிந்து கோவை மண்ணில் கால் பதித்ததும், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் என் சகோதரர்கள் அனைவரும் திரண்டு வந்து என்னை வரவேற்றது என் பயணத்தின் புண்ணியத்தை இருமடங்காக்கியது போல் உணர்கிறேன். அன்பு மட்டுமே உலகை ஆளும்.” என தெரிவித்திருக்கின்றார்.


​பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி பேசியதாவது,
“அடிகளார் அவர்கள் கயிலாயம் சென்று நலமுடன் திரும்ப வேண்டும் என்று அனைத்துச் சமயங்களைச் சேர்ந்த நம் இயக்கத்தினரும் விரும்பினோம், பிரார்த்தித்தோம். நாட்டின் அமைதிக்கும், ஆன்மீக ஒற்றுமைக்கும் இந்தச் சந்திப்பு ஒரு சாட்சி. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சமாதானமே சுகவாழ்வு என அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்” என தெரிவித்தார்


அருகில் கே எம் ரவி ,ஆர் காந்தி ,எஸ் ஜாபர் ,தியாகேஷ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *