தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

ஊதியூர் மலைக்கு செல்லும் பாரம்பரிய பொதுவழித்தடத்தை மாற்றக் கூடாது: பொதுமக்கள் மற்றும் ஊதியூர் மலை பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்.

தாராபுரம்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், ஊதியூர் செங்கோடம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட புல எண் 572 மற்றும் 570 ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பொதுவழித்தடத்தை மாற்றவோ அல்லது வேறு இடம் வழங்கவோ கூடாது என பொதுமக்கள் மற்றும் ஊதியூர் மலை பாதுகாப்பு இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் அளித்த மனுவில், இந்த வழித்தடம் வழியாக பொதுமக்கள் நீண்ட காலமாக ஊதியூர் மலை என அழைக்கப்படும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் ஊதியூர் காப்புக்காடுகளுக்குச் சென்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், மலையில் அமைந்துள்ள முருகர் கோவில், கொங்கண சித்தர் கோவில், உச்சிப் பிள்ளையார் கோவில் மற்றும் கன்னிமார் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு காசிலிங்கம்பாளையம் செங்கோடம்பாளையம்அப்பியபாளையம் மற்றும் ஆத்திக்கட்டுவலசு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி தொடர்ந்து வழிபாடு செய்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஊதியூர் மலை பகுதியில் ஏராளமான மூலிகைச் செடிகள் மற்றும் மூலிகை மரங்கள் காணப்படுகின்றன. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் கால்நடைகளுக்கான இயற்கை வைத்தியத்திற்காக மலையிலிருந்து மூலிகை இலைகளை சேகரித்து வருவதற்கும் இந்த வழித்தடத்தையே பயன்படுத்தி வந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரு தனிநபர் இந்த பொதுவழித்தடத்தை ஆக்கிரமித்து நிரந்தர கட்டிடங்கள் அமைத்ததுடன், மின் இணைப்பு பெற்று தடுப்பு வேலி மற்றும் கதவுகள் அமைத்து பொதுமக்கள் சென்று வருவதை தடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இந்த வழித்தடத்திற்கு பதிலாக மாற்று வழித்தடம் வழங்குவது அல்லது வேறு இடம் ஒதுக்குவது தொடர்பாக ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சிகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அதற்கு தங்களது கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, தனி அலுவலராக உள்ள பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் (PDO) இதுதொடர்பாக எந்தவித தீர்மானமும் எடுக்கக் கூடாது என்றும், பொதுவழித்தடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனுவை ஊர் பொதுமக்கள் மற்றும் ஊதியூர் மலை பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் (PDO) மற்றும் காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் (MLA) நேரில் வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *