கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் ஆக்கிரமிப்பாளர்கள் என அறநிலையத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் நீதிமன்றம் அளித்த நோட்டீஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பிய ஜே ஜே நகர் மக்கள்.கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி மலை பகுதியில் உள்ள அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக அறநிலைத்துறை கடந்த 2025 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தாந்தோணி மலை அருகே உள்ள ஜே ஜே நகர் பகுதியைச் சேர்ந்த 63 நபர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கரூர் தலைமை தபால் நிலையத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தாங்கள் “ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல” எனக்கூறி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அப்பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் நாங்கள் இடம் வாங்கி, முறையாக பத்திரப்பதிவு செய்து,நகராட்சிக்கு முறையான வரிகளையும் செலுத்தி வீடு கட்டி குடி இருந்து வருகிறோம்.தற்போது எங்கள் குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு படிப்பு செலவுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதே தடுமாற்றமாக உள்ள சூழலில் நாங்கள் வாங்கிய வீட்டை அடமானம் வைக்கலாம் என்றால், அதற்கு அறநிலையத்துறை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து தடை விதித்துள்ளனர்.
இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இடத்தை வாங்கி வீடு கட்டி குடியிருந்து வரும் எங்களை ஆக்கிரமிப்பாளர் என்பதை ஏற்க இயலாது. எனவே இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத்துறையின் இந்த தன்னிச்சையான போக்கை தடுத்து, தங்கள் தலைமையிலான ஆட்சிக்கு ஏற்படுத்தும் கெட்ட பெயரை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.