அரியலூர், ஜூன் 20,
அரியலூர் மாவட்டம் வல்லம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை (டாஸ்மாக்) அகற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வல்லம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையால் சமூக சீர்கேடு அதிகரித்து வருவதாகவும், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டிய பொதுமக்கள், கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் கூறுகையில், “மதுபானப் பழக்கத்தால் எங்கள் பகுதியில் 46-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிறுவயது இளைஞர்கள்கூட மதுவுக்கு அடிமையாகி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று வேதனை தெரிவித்தனர்.

மேலும், மதுபானக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

தமிழக முதலமைச்சர் விஜய், மாநிலம் முழுவதும் 717 மதுபானக் கடைகளை மூடுவதற்கும், கோவில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகிலுள்ள மதுபானக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்ததை நினைவூட்டிய பொதுமக்கள், அந்த அறிவிப்பின் அடிப்படையில் வல்லம் கிராம மதுபானக் கடையையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பிஜேபி மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி, பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மதுபானக் கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேபோல், தமிழர் நீதி கட்சி தலைவர் சுபா இளவரசன் பொதுமக்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்ததுடன், அதிகாரிகளிடம் மதுபானக் கடையை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பது குறித்து வல்லம் கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *