மதுரையில் சர்வதேச யோகா தின விழா ரவி சிறப்புக்கல்வி நிறுவனத்தில் உள்ளடக்கிய முறையில் சர்வதேச யோகா தின விழா சிறப்பாக நடைபெற்றது.
மதுரை ரவி சிறப்புக் கல்வி நிறுவனம் , பசுமலை தேவசகாயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து சர்வதேச யோகா தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடியது.
இந்நிகழ்ச்சியில் அறிவுத்திறன் குறைபாடு கொண்ட மாணவர்கள் மற்றும் பொதுப் பள்ளி மாணவர்கள் இணைந்து பங்கேற்று, யோகாவின் மூலம் உடல் நலம், மனநலம், சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர் நிகழ்ச்சியில் இந்திய வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சாமிதுரை, RISE பெற்றோர் பிரதிநிதி முத்தையா, யோகா பயிற்சியாளர்கள் ஜான்சி ராணி மற்றும் ரஞ்சித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
யோகா பயிற்சியாளர்கள் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தனர். இப்பயிற்சிகள் உடல் ஆரோக்கியம், கவன ஒருமைப் பாடு, மன அமைதி, உணர்வுக் கட்டுப்பாடு மற்றும் சமூக பங்கேற்புத் திறனை மேம்படுத்த உதவும் என விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சாமிதுரை உரையாற்றும் போது , “யோகா என்பது உடலையும் மனதையும் இணைக்கும் ஒரு சிறந்த கலை.இது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைத்து மன அமைதியை அளிக்கிறது. அறிவுத்திறன் குறைபாடு கொண்ட நபர்கள் தொடர்ந்து யோகா பயிற்சி மேற்கொண்டால் அவர்களின் உடல்நலம் மேம்படுவதோடு, நீண்டகால ஆரோக்கியமான வாழ்விற்கும் உதவுகிறது. மேலும் அவர்களின் செயல்திறன், கவனத்திறன், தன்னம்பிக்கை மற்றும் அன்றாட வாழ்க்கைத் திறன்களும் மேம்படும்” என்று குறிப்பிட்டார்.
சிறப்பு தேவையுடைய குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்காக யோகா போன்ற நலவாழ்வு செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ரவி சிறப்புக் கல்வி நிறுவனம் மற்றும் தேவசகாயம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முயற்சியை அவர் பாராட்டினார்.
RISE நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவிக்குமார் மற்றும் செயல் இயக்குநர் நிம்பா திமோத்தி ஆகியோர், யோகா உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதோடு, அறிவுத் திறன் குறைபாடு கொண்ட நபர் களின் தன்னம்பிக்கை, சமூகப் பங்கேற்பு மற்றும் சுயநிறைவை வளர்க்கும் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது என்று தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சியை பாராட்டி , யோகா அனைவருக்கும் ஆரோக்கியம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வழங்கும் பொதுவான பயிற்சி என்பதை வலியுறுத்தினர்.