தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர் ஆக- 9. தஞ்சாவூர், புதியப் பேருந்து நிலையம் அருகில், ஆர்.ஆர்.நகரில், தமிழ்த்தேசியப் பேரியக்க விளக்க கூட்டத்தில் இந்திய அரசே மொழி இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றவும், ஆளுநர் பதவியை நீக்கவும், கல்வித்துறை அதிகாரத்தை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், புதிய கல்விக்கொள்கை 2020-யை திரும்பபெறு, நீட் உள்ளிட்ட அனைத்திந்திய தேர்வுகளை தமிழ்நாட்டில் திணிக்காதே, வெளிமாநிலத்தவர் வருகையைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டிற்கு உள் நாட்டு அனுமதி (INNER LINE PERMIT) முறையைக் கொண்டுவர, தொழில், வேளாண்மையை மண்ணின் மக்களுக்கே அதிகாரம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநகரச் செயலாளர் லெ.இராமசாமி தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை சிறப்புரையில், தமிழ்நாட்டு அரசுக்கு மக்களுக்குக் குடியுரிமை கொடுக்கும் அதிகாரம் வேண்டும். நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் இருப்பது போல் தமிழ்நாடு அரசுக்கும் வெளி மாநிலத்தவர்களை அனுமதி மறுக்க “உள்நுழைவு அனுமதி வழங்கும் அதிகாரம் ” (Inner Line Permit) கொடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில ஆட்சி நிறைவேற்றும் சட்டங்கள். இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநர் ஒப்புதல் பெற்றால் தான் சட்டமாகும் என்பது ஆங்கிலேய ஆட்சியின் அதிகாரம். மாநில ஆட்சியைக் கலைக்கும் அதிகாரமும் ஆங்கிலேய ஆளுநருக்கு இருந்தது போல் இந்திய ஆளுநருக்கும் தொடர்கிறது, எனவே ஆளுநர் பதவியை தேவையற்றது.

வட அமெரிக்கா (U.S.A), கனடா, சுவிட்சர்லாந்து, செர்மனி போன்ற எந்தக் கூட்டாட்சியிலும் மைய அரசால் அமர்த்தப்படும் ஆளுநர் என்ற பதவி இல்லை.

மைய அரசுக்கு மாநில ஆட்சியைக் கலைக்கும் அதிகாரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் (356) வழங்குகிறது. இது உலகில் கூட்டாட்சி நாடு எதிலும் இல்லை, மாநில ஆட்சியைக் கலைக்கும் அரசமைப்புச் சட்ட அதிகாரப் பிரிவுகள் 356, 365 முதலிய ஆட்சிக் கலைப்பு விதியை முற்றிலும் நீக்கவேண்டும்.

உலகத்தின் கூட்டாட்சி நாடுகளில் மாநில அரசு அதிகாரப் பட்டியல் கூட்டாட்சி அரசுப் பட்டியல். என அதிகாரப் பகிர்வுகள் உள்ளன. இந்த இரண்டுடன் மூன்றாவது அதிகாரப் பட்டியல் -“பொதுப்பட்டியல் “(Concurrent List) என்ற பெயரில் இந்திய அரசின் மேலதிகாரம் உள்ள கபட நாடகப் பட்டியல் ஏன்? பொதுப் பட்டியலில் உள்ள ஓர் அதிகாரத்திற்கு மாநில அரசு சட்டம் இயற்றினால், ஒன்றிய அரசின் குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் கை எழுத்து இட்டால் தான் சட்டமாகும்.

ஒன்றிய அமைச்சரவை பரிந்துரைக்காமல் குடியரசுத் தலைவர் கையொப்பம் இட முடியாது. இந்திய அரசின் மாறுவேடப் பொதுப்பட்டியல் இரத்து செய்யப்பட வேண்டும். அதிலுள்ள அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுக்கு வர வேண்டும்.

எந்த வரியும் விதித்து வசூலிக்கும் உரிமை தேசிய இன மாநிலங்களுக்கே இருக்க வேண்டும். மாநிலங்கள் வசூலிக்கும் வரியில் 25 விழுக்காடு இந்திய அரசின் செலவுகளுக்குத் தர வேண்டும்.

இந்திய அரசிடம் நாட்டின் பாதுகாப்பிற்கான படைத்துறை, பண அச்சடிப்பு, வெளியுறவு. விண்வெளி ஆய்வுகள் மட்டுமே இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இன மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் அவை மட்டுமே இருக்க வேண்டும். அதில் எல்லா தேசிய இனங்களை பெரியவை சிறியவை என்ற வேறுபாடு இல்லாமல் சம எண்ணிக்கையில் உறுப்பினர்களின் கூட்டரசாக இந்திய அரசை மாற்ற வேண்டும்.

சமற்கிருத (தேவநாகரி) எழுத்து வடிவில் உள்ள ஹிந்தியே இந்தியாவின் ஆட்சி மொழி என்ற அரசமைப்புச் சட்ட விதி 343 ஐ நீக்கி தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய இன மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்கவும்,

அரசமைப்புச் சட்டம் பிறந்தபோது மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வித்துறை அதிகாரம் இந்திரா காந்தியின் அவசரநிலைக் காலத்தில் பொதுப்பட்டியல் என்ற பெயரால் இந்திய அரசின் அதிகாரத்திற்குச் சென்றது அநீதியானது. மழலையர் கல்வி முதல் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கல்வி வரை கல்வித்துறை அதிகாரம் முழுவதும் மாநில மொழிகளில் இருக்க வேண்டும்.

ஓர் இன மாநிலத்தில் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே தொழில் வணிகம் தொடங்க -நடத்த முன்னுரிமை தர வேண்டும். வெளி மாநிலத்தவர்கள், வெளி நாட்டவர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அவர்கள் நிறுவனத்தின் பேரில் குறிப்பிட்ட விழுக்காடு மூலதனம் தமிழ்நாட்டைச் செர்ந்தவர்களோடு கூட்டாக போட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை வேண்டும். தொழில் வேளாண்மை அதிகாரம் மாநிலத்திற்கே இருக்க வேண்டும்.

உண்மையான இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றி அமைக்க புதிய அரசமைப்பு ஆய்வு அவையை நிறுவி மேலே கூறப்பட்ட வடிவில் புதிய அரசாமைப்புச் சட்டத்தை உருவாக்க வலியுறுத்தி வருகிற செவ்வாய்க்கிழமை 18.08.2026 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் போது செயலாளர் கி.வெங்கட்ராமன் தலைமையில் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பேசினார்.

கூட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்க கிளைச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமைச் செயற்குழு பழ.இராசேந்திரன், துணைத் தலைவர் மகளிர் ஆயம் செம்மலர், பொதுக்குழு இராசு.முனியாண்டி, மாவட்டச் செயற்குழு வழக்கறிஞர் சிவராசு, மாநகரச் செயற்குழு சந்திரசேகர், மாநகரச் செயற்குழு செயக்குமார், காவிரி உரிமை மீட்புக்குழு பொறியாளர் செந்தில்வேலன், மாரி.சேகர், பாலன், கரிகாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *