கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு இளநிலை மாணவிகளுக்கான அறிமுக விழா கல்லூரி பொன்விழா அரங்கில் விமரிசையாக நடைபெற்றது. ஜிஆர்ஜி கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி ரங்கசாமி வரவேற்புரையாற்ற, கல்லூரி முதல்வர் முனைவர் பி.பி.ஹாரத்தி கல்லூரியின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்.


​நிகழ்ச்சியில் முதன்மைச் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் (IGP) திருமதி R.V. ரம்ய பாரதி ஐபிஎஸ், மாணவிகள் குறிக்கோள், தெளிவு, ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, சமூக ஊடகத் தீமைகளிலிருந்து விலகி, பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் வாழ வேண்டும் என வாழ்த்தினார். சென்னை பன்னாட்டு ஈசி குழும மனிதவளத் துணைத்தலைவர் திரு.டேனியல் ஜேக்கப் பேசுகையில், இது வாழ்வின் முதல் அத்தியாயம் என்றும், உயரத்திற்குச் செல்ல நன்றி மறவாமை அவசியம் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து கியூஎஸ் ஐ-கேஜ் நிர்வாக இயக்குநர் திரு. ரவின் நாயர், இணை இயக்குநர் திரு. கிருஷ்ணராஜ் ஆகியோர் மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்.


​கல்லூரியின் முன்னாள் மாணவியும், இந்திய கைப்பந்து வீராங்கனையுமான செல்வி. ஷீபா சுரேஷ் தனது பதக்கங்களைக் காண்பித்து, தன் வளர்ச்சிக்குக் கல்லூரியே காரணம் எனத் தன்னம்பிக்கையூட்டினார். பிரிக்கால் ஹோல்டிங் தலைவரும் சிறுதுளி நிறுவனருமான திருமதி வனிதா மோகன் ‘பெண்கள் அதிகாரமடைதல்’ மற்றும் சமூகப் பொறுப்புணர்வு குறித்தும், கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற திருமதி மம்தா வெங்கடேஷ் சவால்களைத் தைரியமாக எதிர்கொண்டு தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பது குறித்தும் பேசினர்.


​கலை அறிவியல் கல்லூரிகளிலேயே முதன்முறையாக TANCAM விளையாட்டு மையத்தை நிறுவிய கல்லூரி நிர்வாகத்தைப் பாராட்டிய TANCAM தொழில்நுட்பத் துணைத் தலைவர் திரு. ராஜா சுப்ரமணியன், பெற்றோர் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் தர வேண்டும் என்றும், மாணவிகள் நூலகங்களைப் பயன்படுத்தி இலக்குகளை அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இறுதியாக, கல்லூரியின் IQAC ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெ. பாலவிஜயலட்சுமி நன்றியுரை வழங்க, தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது. புதிய மாணவிகளின் எதிர்கால வெற்றிக்கு இவ்விழா ஒரு சிறந்த அடித்தளமாக அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *