தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே உள்ள செட்டிகுறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களால் விவசாயம், கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, அவற்றின் செயல்பாட்டிற்கு தடை விதிக்கக் கோரி அப்பகுதி மக்கள் தங்கப்பாண்டி, முருகன், முத்துப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:
செட்டிகுறிச்சி கிராமத்தில் சுமார் 2,500 மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் மேற்கு பகுதியில் நான்கு கல்குவாரிகளும், மூன்று கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. கல்குவாரிகளில் வெடி வைத்து பாறைகள் உடைக்கும்போது, முன்னறிவிப்பு இன்றி பாறைத் துண்டுகள் விவசாய நிலங்களில் விழுவதாகவும், இதனால் விவசாயம் செய்து வரும் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெடி வெடித்த பிறகு அதிகளவில் புகை மற்றும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து வெளியேறும் தூசி விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களில் படிந்து, பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்களை கிரஷர்களில் அரைத்து M-Sand தயாரிக்கப்படுவதாகவும், இதனால் ஏற்படும் தூசி விவசாயத்தை அடியோடு பாதிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


“விவசாயம் இல்லை என்றால் எங்கள் வாழ்வாதாரமே இல்லை”
செல்வி கிரஷர், மகேஷ் கிரஷர், பாலாஜி கிரஷர் என மூன்று கிரஷர்கள் இயங்கி வருவதாகவும், அவற்றின் உரிமையாளர்களே கல்குவாரிகளையும் நடத்தி வருவதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


அரசின் விதிமுறைகளை புறக்கணித்து இரவு, பகல் பாராமல் கற்கள் எடுக்கப்பட்டு, கிரஷர்கள் இயக்கப்படுவதாகவும், இதனால் அதிகளவில் தூசி பரவி விவசாய நிலங்களில் படிவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கால்நடைகள் தண்ணீர் அருந்தும் குளங்கள் மற்றும் நீர்நிலைகளிலும் தூசி படிந்து வருவதால் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், பொதுமக்களுக்கு சுவாசம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.


எனவே, செட்டிகுறிச்சி பகுதியில் தற்போது இயங்கி வரும் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களின் உரிமங்களை ரத்து செய்து, அவற்றின் செயல்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும். புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *